முஸ்லிம் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்...!
(சத்தார் எம். ஜாவித்)
நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களிலும் சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டியதொரு கட்டாயத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. குட்டக் குட்ட குட்டுபவனும் மடயன் குட்டுப் படுபவனும் மடயன் என்றவாறு முஸ்லிம்களை முட்டாள்களாக ஆக்கும் கைங்கரியங்கள் அண்மைக் காலமாக அரசியல் வாதிகளால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்படி நிலைமைகளுக்கு முஸ்லிம்கள் பலிக்கடாக்களாக மாறிவிடாது தமக்கென ஒரு உறுதியான நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தொடர்ந்தம் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது காலாகாலமாக முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் அரசுக்கு முஸ்லிம்களின் சார்பான அதிக வாக்குகளையும், ஆதரவுகளையும் பெற்றுக் கொடுத்து வந்த போதிலும் தற்போதைய அரசில் முஸ்லிம்கள் சமய ரீதியாக பல்வேறுபட்ட வகையிலும் சொல்லொனாத் துன்பங்களையும் துயரங்களையும் அடைந்து விட்டனர்.
இவ்வாறு முஸ்லிம் சமுகம் அரசுக்கு தமது ஆதரவை வழங்கி அரசின் ஆட்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய போதிலும் இனவாதக் கும்பல்களால் முஸ்லிங்களின் சமய விடயங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்களை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்ற குறைகளே அதிகமாக காணப்படுகின்றது. இவ்வாறான தொடர் இடர்களுக்குள் விரைவில் மற்றுமொரு மாகாண சபைத் தேர்தல் மக்கள் தொகை அதிகமாகாக் காணப்படும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் நடைபெறவிருப்பதால் அத்தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலர் முஸ்லிம்களின் தலைமைகள் தாம்தான் என்று மார்தட்டிக் கொண்டு மக்களை தம்பக்கம் இழுத்து கழுத்தறுக்கும் விளையாட்டுக்களே அதிகமாக காணப்படுகின்றது. தற்போது முஸ்லிம்கள் மட்டுமல்லாது தமிழ் மற்றும் கத்தோலிக்க மக்கள் உள்ளடங்கிய சிறுபான்மைச் சமுகங்கள் மீதும் அவர்களின் சமய விழுமியங்கள் மற்றும் சமயத் தளங்கள் மீதும் பெரும்பான்மை இனவாதிகளால் தொடராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனங்கள் சகல சிறுபான்மைச் சமுகங்களடத்திலும் பாரிய வெறுப்புக்களையும், விரிசல்களையும் பெரும்பான்மை மீது ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக சிறபான்மையினரின் சமயக் கடமைகள், அவர்களின் வணக்கஸ்தளங்கள் மீது தாக்குதல்கள் மேற் கொள்ளல், வியாபார நிலையங்கள் மீது மிளேச்சத் தனமான தாக்குதல்கள், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடாத்துதல் போன்ற வெறுக்கத்தக்க செயற்பாடுகள் இலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழுவதற்கான விடயத்தில் பாரிய தாக்கத்தையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்தி வருவதனையே காணக் கூடியதாகவுள்ளது.
இனவாதிகளின் மேற் குறிப்பிட்ட தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் அவற்றை கட்டுப்படுத்த அல்லது தடை செய்ய முடியாத நிலைமைகளே உள்ளது இதனால் இனவாதிகளின் தீய செயற்பாடுகள் மென் மேலும் தொடருகின்றன. இதன்காரணமாக இலங்கை வாழ் மக்களிடத்தில் அரசாங்கம் மீது பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மைச் சமுகங்களான இஸ்லாமிய , இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் நாளாந்தம் இனவாதிகளின் அடாவடித் தனங்களுக்கு இரையாகுவதானது மதங்களின் மீதான அபாய கரமான நிலைமைகளை மட்டுமல்லாது இலங்கையின் இறைமைக்கும் குந்தகத் தன்மைகளைக் காட்டி நிற்கின்றது.
அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் பிரதி நிதிகளாக பலர் இருந்து கொண்டு நாளாந்தம் பெரும்பான்மை என்ற ஆணவத்தால் அதன் ஒரு சில இனவாதக் கும்பல்கள் சட்டங்களை மீறிக் கொண்டு சிறுபான்மை மீது மேற் கொண்டு வரும் அனைத்து விடயங்களையும் கண்டும் காணாததுபோல் இருப்பதும் நடப்பவற்றை மறைத்து அரசுக்கு பெட்டிப்பாம்புகளாக இருந்ததன் விளைவுகளே இன்று சிறுபான்மை மக்களுக்கு எற்பட்டுள்ள பின்னடைவுகளாகும்.
இலங்கை பல்லின, பல் சமகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு என்றே இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் அழுத்தந் திருத்தமாக இருக்கும்போது இன்று அதனை மாற்றுவதற்கே இனவாதக் கும்பல்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசை ஆட்டங்கான வைத்து ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் உள்ள முழு சிறுபான்மைச் சமுகங்களையும் அழிக்கும் வகையிலானதொரு பின்னணியில்தான் இன்று பொதுபலசேனா, ஹெல உறுமைய, ராவணபலய உள்ளிட்ட இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறானதொரு பாரிய சதித்திட்டங்களின் பின்னணியில் சிறுபான்மைச் சமுகங்களின் தலைமைகள் அரசுடன் ஒட்டிக் கொண்டு எல்லா வகையான மத நிந்தனைகளையும் கண்டுகொண்டு அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவ்வப்போது செய்ய வேண்டிய பல விடயங்களை கைநலுவ விட்டுவிட்டு மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டமையே மிச்சம்.
தொடர்ந்தும் தமது இருப்புகளை தக்க வைப்பதற்காக அரசியல் தலைமைகள் மக்களிடத்தில் வருவதற்கான சந்தர்ப்பங்களாக இரு மாகாண சபை தேர்தல்களை எதிர் கொள்ள வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. அரசே இனவாதக் கும்பல்களை கண்டிக்காது பச்சைக் கொடி காட்டும்போது தற்போதும் கூட ஒரு சிலரைத் தவிர பல அரசியல் வாதிகள் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றவே தமது காய்களை நகர்த்தும் வகையில் மக்கள் மத்தியில் இறங்கியுள்ளனர்.
யார் என்னதான் செய்தாலும் முஸ்லிம்கள் இனியாவது சரியான விதத்தில் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது. இதுவரை காலமும் சமுக ரீதியாக எதிர் கொண்ட இன்னல்களும், அதனால் அடைந்த பின்னடைவுகளுக்கும் இனியாவது சரியான பாடம் புகட்டுவதற்கு சமய ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தலைமைகளை தேர்தெடுக்க வேண்டியதொரு காலமாக இன்றைய தேர்தல் காலங்கள் முஸ்லிம்களுக்கு அமைந்துள்ளது. தேர்தல் என்றவுடன் அரசியல் வாதிகளுக்கு திருவிழாக்கள் போன்றதாகும் மற்றவன் என்னபாடு பட்டாலும் பறவாயில்லை தமது இலக்குகளை அடைவதற்காக அவர்கள் மக்களிடத்தில் எதனையும் செய்வதில் சூரர்கள்.
ஆனால் மக்கள்தான் இனிவரும் காலங்களில் யாரை அரசியலில் உள்வாங்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டுமே தவிர மீண்டும் அவர்களின் திருவுதாளங்களுக்கு ஆளாகக் கூடாது. பல முஸ்லிம் கட்சிகள் தமது இருப்புக்களை அறிந்து கொள்ளாது தனித்தனி கட்சிகளாகவே மீண்டும் தேர்தலில் களமிறங்குகின்றன இந்நிலைமைகள் இனிவரும் காலங்களில் முஸ்லிம்கள் அரசியலில் இருந்து ஓரங் கட்டப்படுவதற்கான எதிர்வு கூறலாகவே நோக்க வேண்டியுள்ளதாக புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக காணப்படும்போது முஸ்லிம்கள் ஒரே கட்சிகளில் ஒன்றுபட்டு தேர்தலில் களமிறங்காத பட்சத்தில் தொடர்ந்தும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவங்கள் கேள்விக்குறிதான். வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை இன்மை காரணமாகவே அவை தமது பிரதி நிதிகளை வெகுவாக இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.
வடமாகாண சபைத் தேர்தலில் பெற்ற பாடத்தையாவது மேல் மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் தமது அரசியல் போட்டிகளை விட்டுவிட்டு விட்டுக் கொடுப்புக்களுடன் வெற்றியை இலக்காக் கொண்டு செயற்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ற வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தீர்க்கமான முடிவுகளில் ஒற்றுமைப்பட வேண்டும் மாறாக விதண்டாவாதமும் போட்டித் தன்மைகளுடனும் செயற்படுவார்களானால் வீணான முறையில் வாக்குகளை இழக்க வேண்டியதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
ஏனைய சமுகங்கள் தமது சமுகத்திற்காய் ஒற்றுமைப்படும்போது முஸ்லிம் சமுகமும் தமது சமுகத்தினதும், சமயத்தினையும் பாதுகாப்பதற்கு ஏன் ஒற்றுமைப்பட முடியாது? எனவே முஸ்லிம் தலைமைகள் வாக்கு வேட்டைக்காக மக்களின் வாக்குகளை பிரிக்காது அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் வாக்குகளை சிதற விடாது சிந்தித்து செயற்பட்டால் முஸ்லிம் சமுகத்திற்கு ஒரு உறுதியான அரசியல் தலைமைகளை உருவாக்கலாம் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
Post a Comment