இலவசமாக கிளினிக் புத்தகம்
(மருதூர ப்ரிஆ)
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை 2004 ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால், முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியினால் வேறொரு புதிய இடத்தில் அமையப்பெற்றது. படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் இவ் வைத்தியசாலையைக் கட்டியெழுப்புவதில் வைத்திய அதிகாரிகள், சக உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க ஊழியர்களும் பாடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக இதன் வளர்ச்சி சிறப்பாக உள்ளது எனப் பலரும் பாராட்டுகின்றனர்.
அந்த வகையில், இதுவரை காலமும் கிளினிக் மருந்துகள் எடுக்கின்ற நோயாளர்கள் ஒரு கொப்பியையே வாங்கிப் பாவித்துக்கொண்டிருந்தனர். அந்தக் கொப்பியும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டிருக்கும். இதனால் சில சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. வேறு வைத்தியசாலைகளில் அல்லது வேறு வைத்தியர்களிடம் சிச்சைக்காக செல்கின்ற போது, தங்களிடம் நோய் மற்றும் சிகிச்சை பற்றிய விபரங்கள் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
இந்தக் குறைபாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். என். ஆரிப் மற்றும் டாக்டர். எம். ரீ. எம். முனீர் ஆகியோர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக, தற்போது நோயாளர்களுக்கு இவ்விரண்டு கொப்பிகள் - ஒன்று வைத்தியாசாலையில் வைக்கவும், மற்றையது நோயாளிகள் தங்களோடு வைத்திருக்கவும் - வழங்கப்படுகின்றது. அதுவும் எதுவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இந்தக் கிளினிக் புத்தகங்களை இலவசமாக வைத்தியசாலையின் விபரங்களைத் தாங்கியவாறு அச்சிட்டு வழங்க முன்வந்த எஸ்.எம்.எம். ஹல்சியோன் தனியார் நிறுவனத்தின் விற்றாபயோற்றிக்ஸ் பிரிவினர் அதன் முதற்கட்டமாக ஒரு தொகுதி கொப்பிகளை 06. 03. 2014 வியாழக்கிழமை அதன் முகவர் திரு. ஜுலியஸ் ஓட்ஸ்கோனின் மூலமாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் அவர்களிடம் கையளிக்கப்பட்டு நோயாளர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்தும் இதனை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்படி நிறுவனத்தினால் தொடர்ந்தும் வழங்க முடியாது போகும் பட்சத்தில், தான் அதனைத் தொடர்ந்து வழங்குவேன் என, வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினரும், மரைக்காயருமான நௌபர் ஏ பாவா முன் வந்ததை சகலரும் பாராட்டினர். எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும், 2014 ஆகிய இவ்வாண்டில் நிறைய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் மாவட்ட வைத்திய அதிகாரி தனதுரையின் போது குறிப்பிட்டார்.
Post a Comment