Header Ads



அபுதாபி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு - விமான சேவை பாதிப்பு


அபுதாபியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எதிஹாட் விமான நிறுவனம் மற்றும் அதன் மிகப்பெரிய போட்டியாளர்களாகக் கருதப்படும் கத்தார் ஏர்வேஸ், துபாயை மையமாகக் கொண்ட எமிரேட்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனங்களின் பெரும்பான்மையான நெடுந்தொலைவு விமானப் போக்குவரத்துகளின் மையங்களாக வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒன்றான அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் புதிய முனையம் உட்பட விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த விமான நிலையத்தில் நேற்று காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எதிஹாட் நிறுவனத்தின் பெரும்பாலான விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. சில விமானங்கள் இங்கு தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதிலும் தொழில்நுட்பத் தாமதங்கள் நீடிக்கலாம் என்ற அறிவிப்பும் நேற்று வெளியானது.

தாமதத்திற்கான காரணத்தை அந்த நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை எனினும், ஐக்கிய அரபுக் குடியரசுப் பகுதிகளில் தற்போது காணப்பட்டுவரும் அடர்ந்த பனிமூட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

No comments

Powered by Blogger.