அரசியல் தலைமைகளினால் கைவிடப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகம்..!
(நஜீப் பின் கபூர்)
கடந்த 23ம் திகதி நாம் www.jaffnamuslim.com இணையத்தளத்திற்கு, ஏமாற்றப்படுகின்ற முஸ்லிம் சமூகத்தின் மாற்று வழி என்ன என்று கேட்டு எமது தனிப்பட்ட கருத்துத் தொடர்பாக சமூகத்தின் அபிப்பிராயம் என்ன என்று கேட்டிருந்தோம். இந்த தனிப்பட்ட அபிப்பிராயத்தை அங்கிகரித்து அனைவரும் கருத்துச் சொல்லி இருந்தீர்கள். இப்படிக் கருத்துச் சொல்லி இருக்கின்றவர்களில் ஒருவரைக்கூட இந்தக் குறிப்பை முன்வைக்கின்றவனுக்குத் தனிப்பட்ட ரீதியில் தெரியாது. உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து முஸ்லிம் சமூகத்திற்கு இந்த விவகாரத்தை இன்னும் சற்று விரிவாக சொல்லலாம் என்று தோன்றுகின்றது.
தற்போது முஸ்லிம் சமூகம் தமது தலைவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ஒரு சமூகமாக மாற்றப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகள் குழி தோன்றி புதைக்கப்பட்டு ஒரு தலைப்பட்சமான தீர்மானங்களும் தீர்ப்புக்களும் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் சலுகைகள் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலிருந்து தெற்குவரை தொப்பி போட்டுக் கொண்டு திரிய சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதவகையில் பல ஆதரங்கள் இருக்கின்றபோது, இது பற்றி கேள்வி எழுப்பத் துணிவில்லாமல் ஜெனீவாவரை போய் வந்த உலமாக்களும், அதிகாரம் படைத்த அமைச்சுப் பதவிகளை சுமந்து கொண்டிருக்கின்ற தலைமைகளும் இது விடயத்தில் ஊமைகளாக இருந்து வருகின்றனர்.
மாத்தறையில் பிரத்தியேக வகுப்புக்களுக்குப் போன முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பில் கை வைத்தவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது. சுபஹூத் தொகைக்குப்போவர் தொப்பி உறிப்பட்ட சம்பவம் எங்கும் நடக்கவில்லையா பிரபல்யமான முஸ்லிம் வர்த்தக நிலையம் தாக்கப்பட்ட போது அந்த வழக்கை வாபஸ் பண்ணிக் கொள்ளுமாறு கட்டளை கொடுத்தவர்கள் யார்.
உண்மையிலேயே முஸ்லிம்களுக் கெதிராக இன்னும் எண்ணற்றவகையில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளுக்கு மத்தியில் இங்கு அப்படி ஒன்றும் கெட்டபடியாக நடக்க வில்லை என்று வாய்கூசாமல் பேசுகின்றவர்கள் ஒருபுறம் இருக்க, ஏன் இந்த இடத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கின்றது இன்னும் இப்படி எல்லாம் எமது சமூகத்திற்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் நடந்துதானே வருகின்றது என்று தட்டிக் கேட்க ராஜதந்திர சுற்றுழா சென்ற நமது மதப் பெரியார்களுக்கும் மேடையில் முழங்குகின்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கின்றது.
நீங்கள் சொல்லுகின்ற படியல்ல இப்படியான அச்சுறுதத்ல்கள் எமது சமூகத்திற்கு எதிரக தொடர்ந்து நடக்கின்றது என்று பட்டியல்போட்டுக் காட்ட நமது தலைவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது. எனவே ஒட்டு மொத்தமாக நமது தலைவர்கள் பட்டம் பதவிகளுக்காக சரணாகதி அரசியல் செய்வது பகிரங்க விவகாரம். ஆள்வைத்து நம் மீது நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத நமது தலைமைகள் பெட்டிப் பாம்பாக இருந்து விட்டு தேர்தல் காலத்தில் மட்டும் வெளியே வந்த நாடகமாடுகின்றனர்.
இந்த நாட்டின் பிரதான எதிர்க் கட்சி முஸ்லிம்களை எப்படி எல்லாம் நடாத்தி வந்திருக்கின்றது என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு நாம் சொல்லுகின்ற படி வாழ முடியாவிட்டால் வண்டியைக் கட்டவேண்டியதுதான் என்று நமது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.பகிரங்கமாகச் சொன்னதும் எமக்கு நினைவிற்கு வருகின்றது. மற்றுமொருவர் மரத்தில் தொங்குகின்ற செடி, கொடிகள்தான் நீங்கள் என்று ஜனாதிபதி விஜேதுங்ஹ பேசியதும் நமது பதிவில் இருக்கின்றது. இது காலவரைக்கும் நமது பாராளுமன்றத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பன்றி இறைச்சி வைக்கப்படுவது ஆரம்பம் முதல் தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. இல்லை எனக்கு பன்றிக்கறி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஐ.தே.கட்சி உறுப்பினர் வேண்டுமென்றே அடம்பிடித்து பன்றிக்கறியை சிற்றுண்டிச்சாலையில் வைக்கப் பண்ணியது நம்மில் எத்தனை பேருக்கத் தெரியும்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்றபோது ரணில் விக்கிரமசிங்ஹவுடன் நோக்குகின்ற போது இன்றுள்ள ஆட்சியாளர்கள் பருவாயில்லை என்ற நிலை. ரணில் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு உள் நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நெருக்கடிகளைக் கொடுப்பார். கடந்த காலங்களில் கொடுத்தும் வந்திருக்கின்றார் என்பதும் நமக்குத் தெரியும்.
பிரதான கட்சிகளின் நிலைப்பாடு இப்படி இருக்க நம்மவர்கள் சமூகத்தின் பெயரைப் பாவித்துக் ஆடுகின்ற நாடகங்கள் பற்றியும் தற்போது சற்றுப் பார்ப்போம் அஸ்ரஃப் மறைவிற்குப் பின் தலைமைப் பதவி தன்னனை வந்து சேராவிட்டாள் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறிவிடுவேன் என்று அச்சுறுத்தியது யார் என்பது நமது சமூகத்திற்கு தெரியுமா என்ற கேள்வியைக் கேட்கவிரும்புகின்றோம். அவர்கள் கட்சி மாறினால் கட்சியை உடைத்தால் அது சமூகத்தின் நன்மைக்கு, மற்றவர்கள் அதனைச் செய்தால் எட்டப்பர்கள் என்று அவர்களுக்குப் பெயர் கொடுப்பார்கள். இப்படித்தான் மு.கா. அரசியல் அகராதியில் தற்போது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கட்சி தாவித்தாவி இப்போது சாகும் வரை இதற்குப் பின்னர் கட்சி மாற மாட்டேன் என்ற வேறு சான்றிதழ் வழங்குகின்றார் அந்தக் கட்சி நிஜமானவர்..! யார் யாரை ஏமாற்றுவது எப்படி எல்லாம் ஏமாற்றுவது என்பதற்காக இப்படியும் வார்த்தைகள் பேசும் மு.கா.காரர்கள்
கட்சியைப் பலப்படுத்துகின்ற நடவடிக்கைகள் கிரமமாக தற்போது நடைபெற்று வருக்கின்றனவா? கட்சிக் கிளைகள் மாவட்ட மாநாடு எல்லாம் அஸ்ரஃப் மறைவுடனே மறக்கப்பட்ட பக்கங்களாக மு.கா. அகராதியில் எழுதப்பட்டாயிற்று. எப்படியும் தேர்தல் என்று வந்து விட்டால் அத்தி பூத்தால் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்தாலும் நடக்கும். கட்சியில் கட்டுப்பாடு, கொள்கை என்று எதுவுமே கிடையாது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் திட்டவட்டமாக நாம் மஹிந்த ராஜபக்சாவைத்ததான் ஆதரிப்போம் என்று (இருவருடங்கள்) முன்கூட்டிக் கிழக்கு மாகாண அமைச்சர் ஹபீஸ் நசீர் அறிவிப்புத் தொடர்பாக மு.கா. நிலைப்பாடு என்ன என்று நாம் கேள்வி எழுப்பியபோது இதனை பதில் செல்லாமல் மௌனத்தால் சமாளிப்பார்கள் என்ற நமது குறிப்புப்படி அதுவும் நடந்து கொண்டிருக்கின்றது.
தலைமைக்குத் தெரியாமல் அமைச்சுப் பதவி பெற்ற பசீர், என் மீது முடியுமானால் கை வைத்துப்பார் நான் பெரியவர் மடியில் பேய் உறங்கிக் காட்டுகின்றேன் என்றவர் தேர்தலில் அன்று ஒதுங்கி நின்று தலைவருக்குச் சிவப்புக் கொடி காட்டியவா, இன்று அதே தலைவர் மேடையில் இருக்கின்றபோது அரசாங்கத்திடம் நாம் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று நம்பிக்கையில் வார்த்தைகளை வெளியே தள்ளும்போது. இந்த அரசாங்கத்திற்கு ஆணவம் படைத்திருக்கின்றது என்று தலைவர் ஹக்கீம் பேசுவது நமது சமூகத்திற்கு முறன்பாடகத் தெரியவில்லையா? இவர்கள் பேச்சு நடவடிக்கை, பார்வை எல்லாம் சுயநலம் - அரசியல் நாடகம் என்பதனை நாம் சொல்லித்தான் இனியும் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.
ஜெனீவாவில் நாம் அரசுக்கு எதிராக எதையும் பேசவில்லை - கொடுக்க வில்லை என்று பேசுகின்றவர் அந்த வார்த்தையால் தமது பதவிகளை பாதுகாக்கின்ற ஏமாற்று வேலையை ஒரு புறத்தில் செய்து கொண்டு, இந்த அரசுதான் எங்களுக்கு எல்லாம் அடுத்த ஜனாதித் தேர்தலில் திட்டவட்டமாக எமது ஆதரவு ஜனாதிபதிக்கு என்று ஐஸ்...! வைத்து இந்தத் தேர்தலில் முன்னுக்குப் பின் புறம்பாகப் பேசி வாக்கு வேட்டையை நடாத்துகின்றார்கள் மு.கா தலைவர்கள்.
எனவே ஓட்டு மொத்தத்தில் ஞானசார சேரர் பெயரைச் சொல்லி இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இந்தத் தேர்தலில் கொள்ளையடிக்கின்றார்கள். நிச்சயமாக ஞானசாரரிடத்தில் இவர்கள் விடயத்தில் இவர்களினால் சமூகத்;திற்கு விமோசனம் பெற்றுத்தர முடியாது என்பது உறுதி. ஞானம்முன் இவர்கள் சரணாகதி அடைவர்கள் என்பதனை நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம். ஞானம் பெரிய இடத்துக் கட்டளைப் படிதானே காரியம் பார்க்கின்றது. எனவே தேர்தல் முடிந்தவுடன் நமது தலைகளின் மௌன கீதத்தைத்தான்சமூம் இவர்களில் வாயிலிருந்து கேட்க முடியும்.
ஞானத்திற்கெதிரான நஸ்டஈடு என்று மற்றுமொருவர் குரல் கொடுத்திருக்கின்றார் பெரியவர் அழைத்து பிரச்சினை பண்ணாமல் நஸ்டஈட்டு கதையைத் நிறுத்திக் கொள் என்ற கட்;;;;;;டளையுடன் எல்லாம் சரியாகப் போய்விடும். நஸ்டயீட்டுக் கதையும் ஒரு தேர்தல் பிரச்சாரம் என்பதனை நமது சமூகத்திற்கு விரைவில் தெரிந்து கொள்ள வரும்.
ஜெனீவா விடயத்தில் அமெரிக்கா உலகலவிய ரீதியில் நடத்துகின்ற அநீயாயத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகள் வாக்குப் பண்ணிய விவகராம் ஒருபக்கம் இருக்க இங்குள்ள முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்குமாறு இலங்கை நண்பர்களுக்கு ஜெனீவாவில் முறைப்பாடு கொடுத்தவர்களினால் ஒரு வார்த்தையேனும் அங்கு பேச வைக்க முடியாமல் போனது இவர்களின் இராஜதந்திர கோவனத்தைக் காட்டுகின்றது.
அரசியல் என்பது ராஜதந்திரம். எனவே அடுத்தவர்கள் எப்படிப் போனாலும் நமது சமூத்தின் பேரால் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதற்கு மூக்கனாம் கயிராகவும், ஆளும், எதிரணி என்பன நமது சமூகத்தின் மீது நம்பகத்தன்மையில்லாமல் நடந்து கொள்கின்ற போக்கிற்கும் ஒரு எச்சரிக்கையாக இந்த முறை சமூகம் நமது வாக்குகளை ஜே.வி.பிக்குப் பண்ணிப் பார்க்லாம் என்ற கருத்தை மீண்டும் ஞாபகப்டுத்துகின்றோம்.
ஜே.வி.பி.நாகரிகமான அரசியல் செய்கின்றவர்கள் என்பதாலும் எமக்காக பல சந்தர்ப்பங்களில் இதயசுத்தியுடன் குரல் கொடுக்கின்றார்கள் என்பதற்கான நன்றிக் கடனாகக் கூட இந்த முடிவை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எடுக்கலாம். நடாற்றில் விடப்பட்டிருக்கின்ற முஸ்லிம்களுக்கு இதனைத் தவிர இந்த நேரத்தில் வேறு மாற்றங்கள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
நேற்று காலியில் நடந்த ஜே.வி.பி. இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த நாட்டில் ஆட்சியாளர்களின் ஏற்பாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற மத வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் - எதிர்க்கின்றோம் என்றும், நமது ஆட்சி ஏற்பட்டால் சிறுபான்மை சமூகம் எந்த விதமான தொந்தரவுகலுமில்லாது இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குவோம் என்று ஜே.வி.பி.தலைவர் அணுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்புச் செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நம்பி கெட்ட சரித்திரங்கள் பலவுன்டு அதனால்தான் பல ஆண்டுகள் நிரைய உயிர்கள் கொல்லப்பட்டுவிட்டன இருந்த போதும் இதுவரை தீர்வென்ரு எதுவுமில்லை நீங்கள் சொல்வதுபோலும் jvp கூருவது போன்ரும் முஸ்லிம் தமிழ் மக்களூக்கு நல்லது நடக்குமாக இருந்தால் அதர்க்கு இப்போ இருக்கின்ர கடும் போக்குவாத இனவாத கட்சிகள் இவைகளூக்கு ஆதரவு வழங்குமாக இருந்தால் jvp க்கும் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு வழங்குவது தவரில்லை என்பதே எனது கருத்து
ReplyDelete