சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை (படம் இணைப்பு)
(Adt) எழில் கொஞ்சும் மலையகத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து அதன் முலம் கிடைக்கும் வறுமானத்தால் தமது குடும்ப வறுமையை போக்க முடியாத சூழ்நிலையில், சில பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்று செல்வது அதிகமாகியுள்ளது.
எனினும் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் எத்தனை பேர் தமது பொருளாதாரத்தை சீர் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார்கள் எனில்.. அது கேள்விக் குறியே.
இந்த வரிசையில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நம்பி இன்று தனது வாழ்வைத் தொலைத்துள்ள ஒருவரே, நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொனக் தோட்டத்தின் மீனாட்சி பிரிவில் வசிக்கும் விஜயலட்சுமி (வயது 47).
இரண்டு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமியும், இவரது கணவரும் தோட்ட தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் தமது பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும் எண்ணத்தில், தோட்ட வேலையை விட்டு விட்டு, தமது தோட்டத்தில் உள்ள துணை முகவர் மூலமாக, கொழும்பில் உள்ள பிரதான முகவர் ஒருவரை அணுகி, 2008ம் ஆண்டு, விஜயலட்சுமி சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.
அங்கு மூன்று வருடங்கள் பணிபுரிந்த இவருக்கு முறையாக சம்பளம் கொடுபடாத நிலையில், பெரும் இன்னலுக்கு மத்தியில் நாடு திரும்பியதாக தெரிவித்தார்.
அதன் பிறகு துணை முகவரின் வற்புறுத்தலின் பெயரில் 2012ஆம் ஆண்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு சென்ற விஜயலட்சுமி அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
2013ம் ஆண்டு 7ம் மாதம் வீட்டு உரிமையாளர்களுடன் காரில் பயணித்த பொழுது ஏற்பட்ட இந்த விபத்தால் வீட்டு உரிமையாளர்கள் இறந்து விட, கை, கால் முறிவால் பாதிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் சவூதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அதனை தன் கணவருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பிறகே தான் நாடு திரும்பியதாகவும் தனக்கு ஒன்பது மாதங்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெறவில்லை எனவும் விஜயலட்சுமி குறிப்பிடுகின்றார்.
நாடு திரும்பிய இவர் நேராக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றதாகவும், அதன் பிறகு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் அவரது துயரங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.. தற்போது வீட்டில் இருந்து கண்டி வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு பெரும் செலவும் ஏற்படுவதாக கூறும் இவர், தோட்ட தொழிலாளியான தனது கணவரின் வருமானத்தில் அதனை ஈடு செய்ய முடியாது உள்ளதாகவும், தமது உணவிற்கே பெரும் சிரமமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி தற்போது சுயமாக தனது வேலைகளை செய்து கொள்ள முடியாத நிலையிலுள்ள இவருக்கு, உயர்தரம் படித்த இவரது மகள் உதவியாக இருப்பதாகவும் அதனால் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து தம்மை மீட்பதற்கு எவ்வித உதவியும் இல்லாத நிலையில் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இவரின் கணவர் தெரிவித்தார்.
தமது தந்தை, தாயை கண்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றால், சுமார் 10 நாட்களுக்கு அங்கேயே தங்க நேரிடுவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தானும் தனது தம்பியும் தனிமையில் வசிப்பதாகவும் அவரது மகள் கூறுகின்றார்.
அத்துடன் தாய் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 10 நாட்களும் தந்தையும் கண்டியில் அறை எடுத்து தங்க வேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று முறைப்பாடு செய்த பொழுது மூன்று மாதங்கள் கழித்து வருகை தரும்படி கூறியுள்ளனர். இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொடர்பாக துணை முகவரோ பிரதான முகவரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தாததோடு, இந்த விபத்து தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் தட்டிக்கழித்துள்ளதாக தெரிகிறது.
அப்படியானால் துணை மற்றும் பிரதான முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று செல்லும் பெருந்தோட்ட பெண்களின் நிலை என்ன? இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு? இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார்?
குடும்பத் தலைவியான விஜயலட்சுமியின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியாகியுள்ள நிலையில் அவரது கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது? வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பல பெருந்தோட்ட பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவருவது மிக மிக குறைவாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=idp3FPiEkeA
https://www.youtube.com/watch?v=idp3FPiEkeA
Post a Comment