Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக்கொண்டு கைகட்டி இருக்க முடியாது - ஹனீபா மதனி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அநியாயங்களையும், கொடூரங்களையும் பார்த்துக்கொண்டு கைகட்டி இருக்க முடியாது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு தெளிவான பார்வையுண்டு, அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை கட்சியின் தலைவரும், செயலாளர் நாயகமும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வைத்து மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்

இவ்வாறு அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளருமாகிய எஸ்.எல்.எம் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்.

ஜெனீவா விவகாரம் பேசுபொருளாக இருக்கின்ற ஒரேயொரு காரணத்திற்காக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை மூடி மறைக்கப்பட வேண்டுமென எவரும் எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு விஜயம் செய்த மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் 50 பக்க அறிக்கை ஒன்றை கையளித்தமை குறித்து இப்போது பேரினவாதிகள் கூச்சல் போடுகின்றனர். இதனைப்பயன்படுத்தி அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரசை எப்படியாவது வெளியேற்றி விடலாம் என துடியாய்த் துடிக்கின்றனர்.

காயப்பட்ட சமூகத்தின் புண்ணை ஆற்ற வேண்டியவர்கள் பற்றியெரிகின்ற சமூகப் பிரச்சினைகளை தணிக்க வேண்டியவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் ஏன் அரசில் ஒட்டிக்கொண்டிருக்கிறது எனக் கூச்சலிடுகின்றனர். அரசு நியாயமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசின் காதுக்குள் சிப்பமாகவே நடந்து கொள்ள வேண்டிவரும். முஸ்லிம் காங்கிரஸ் எப்போது வரை அரசில் இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே தீர்மானிக்கும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் காலம் தொடக்கம் சரணாகதி அரசியலை எப்போதும் நடத்தியதில்லை. மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வழியில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதுடன், சமூகத்தின் மீதான அடாவடித்தனங்களையும் தட்டிக்கேட்டு வருகின்றது. 

நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் போதும், எமது இஸ்லாமிய பன்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதும் நாம் வாய் பொத்தி மௌனிகளாக இருக்கவேண்டுமென இனவாதிகளும், பேரினவாதத்திற்கு துணை போகும் சில்லறைகளும் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமான விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. நவநீதம்பிள்ளையிடம் கையளித்த ஆவணம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த வருடம் நடைபெற்ற வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தல் மேடைகளில் பகிரங்கமாகவே அறிவித்தது. அப்போது அதனை தேர்தல் குண்டு என கொச்சப்படுத்திய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் இப்போது இதை வேறு விதமாக கதையளக்கின்றனர். பதவி பட்டங்களுக்காகவோ, வயிற்றுப்பிளைபிற்காகவோ, முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்ததை காட்டிக்கொடுக்கும் அரசியலை செய்யப்போவதில்லை.

நாம் ஆளும் கட்சியில் இருந்தாலும் அரசு எம்மை ஒரு எதிர்க்கட்சியாகவே பார்க்கின்றது என்பது கசப்பான உண்மையாகும். நடைபெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்களிலோ, வேலைவாய்ப்புக்களிலோ முஸ்லிம் காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டே வருகிறது, ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இதுபற்றி ஒருபோதும் அறிக்கை விடவுமில்லை, அரசை விமர்சிக்கவுமில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசுடன் இருப்பதற்கு பல்வேறு புறக்காரணிகளும் உண்டு. கட்சியையும் சமூகத்ததையும் பாதுகாக்கும் காரணமும் அதில் இருப்பதாக அறியப்பட்டிருந்த போதிலும் அறியப்படாத வெளிப்படையாக இச்சூழலில் சொல்ல முடியாத இன்னும் பல மறைகாரணிகளும் இல்லாமலில்லை. அமைச்சுப்பதவி மட்டும் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒருபோதும் பொருட்டாக இருந்ததில்லை. சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்தே இதை இக்கட்சி நிரூபித்து வந்திருக்கின்றது.

சொந்தக் காலில் இருந்து அரசியல் செய்யும் கட்சி என்பதனால் அமைச்சுப் பதவிகளின்றியே அரசியலில் பயணிக்கும் சக்தி இக்கட்சிக்குண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

எனவே முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் தலையாய கடமையை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் சிறப்பாக செய்யும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது இக்காலத்தின் கடமையாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

No comments

Powered by Blogger.