Header Ads



முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகள்..!

(ஏ.எல்.நிப்றாஸ்)

வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை மரங்கள் குலையின் பாரம் தாளாமல் சரிந்து விழுந்தால் ஒரு கம்பை (தடியை) வைத்து 'முட்டுக்' கொடுத்து நேராக நிற்பாட்டி வைப்பதுண்டு. இவ்வாறு முட்டுக் கொடுக்கப்படும் கம்புகளுக்கு மரத்தை தாங்கிப் பிடிப்பது மட்டும்தான் வேலை. அதற்கப்பால் அதனது சிந்தனை ஓடாது. 

சில வேளைகளில் வாழை மரத்தை விட பெறுமதிமிக்க மரக் கந்துகளும் தனித்தோ கூட்டாகவோ வாழைக்கு 'முட்டாக' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருபோதும் தாம் சுயமாக வளர்ந்து மரமாகி, தோப்பாவது பற்றி 'முட்டுகள'; யோசிப்து கூட இல்லை. மண்ணில் புதைந்துள்ள தமது அடிப்பாகங்கள் அழிந்து கொண்டிருப்பது பற்றி கடைசி வரைக்கும் முட்டுக்களுக்கு எவ்வித சலனமும் கவலையும் இருப்பதுமில்லை. 

அதேபோல் - முட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் மரம், முட்டின் நலன் பற்றி அலட்டிக் கொள்வதே கிடயாது. தான் நிலத்தில் விழுந்து கனிகள் சிதைந்து விடாதபடி குறித்த முட்டு தன்னை தாங்கிப் பிடித்தால் மட்டும் போதுமானது என்ற இறுமாப்பில் மரம் இருக்கும். 

ஒரு கட்டம் வரும். அப்போது மரம் சுயமாக நிற்பதற்கான திடகாத்திரத்தை பெற்றுவிடும், முட்டுகள் தேவைப்படாது. அப்போது மரங்கள் முட்டுக்களை இம்மியளவும் கணக்கெடுக்காது. அவ்வேளைகளில், சில முட்டுக்கள் தானாக கீழே விழுந்துவிடும் இன்னும் சில முட்டுக்கள், முட்டுக் கொடுப்பதாக வெளியில் காட்டிக்கொண்டு உண்மையில் மரத்தில் பிடிமானத்திற்காக சாய்ந்து கொண்டிருக்கும். மரங்கள் இன்னும் உயர வளரத் தொடங்கி விட்டால் தோட்டக்காரன் அநேகமான முட்டுக்களை அப்புறப்படுத்தி விடுவான். அவற்றில் சில விறகுக்காக பயன்படுத்தப்படும். மேலும் சில 'முட்டுக்கள்' அடுத்த விளைச்சல் காலம் வரும்போது பாவிப்பதற்காக ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்படும். 

இந்தப் பீடிகையில் இருக்கின்ற 'மரங்களை' நாட்டின் ஆட்சியதிகாரம் எனவும் 'முட்டுக்களை' முஸ்லிம் கட்சிகள் எனவும் 'விளைச்சலை' தேர்தல்கள் எனவும் கற்பனைசெய்து  கொண்டு மேலே உள்ளதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். இலங்கையின் ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் கட்சிகளின் உறவு எப்படி இருக்கின்றது என்பதும் விளங்கும், இன்னும் பல உள்ளர்த்தங்களும் பட்டும்படாமல் புரியும் உங்களுக்கு.

பூஜ்ஜித்திற்குள் ராஜ்ஜியம்

முஸ்லிம் அரசியலின் வரலாறு காலத்திற்கு காலம் பல்வேறு திருப்பங்களை சந்தித்து வந்திருக்கின்றது. அதில் இரு திருப்பங்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கமும் அதன் ஸ்தாபக தலைவரின் மரணமும். அஸ்ரஃபின் மரணத்திற்குப்  பின்னரான இந்த 13 வருடகால முஸ்லிம் அரசியல் என்பது பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியத்தை ஆள்கின்ற அரசியலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. அஷ்ரஃப் என்ற தனிமனிதன் பெற்றுத் தந்தவற்றை விட, அதற்கு பின்னரான பல முஸ்லிம் தலைமைகள் பெற்றுத்தந்த உரிமையும் அபிவிருத்தியும் மிகச் சொற்பமானவை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். 

இதற்கு அடிப்படைக் காரணம் உள்வீட்டுச் சண்டைகளும் சகோதர கட்சிகளிடையேயான மோதலுமாகும். உண்மையில் இன்று முஸ்லிம் அரசியலை ஆட்கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளில் அநேகர் முஸ்லிம் காங்கிரஸின் (அஸ்ரஃபின்) பட்டறையில் வளர்க்கப்பட்டவர்கள். அவ்வாறுதான் அவர்கள் தம்மை சுய அறிமுகம் செய்து கொள்கின்றார்கள். ஆனால், இவர்களுள் கிட்டத்தட்ட எல்லோரினதும் இயங்குதளங்களை காணுகின்ற போது தலைவர் அஸ்ரஃபின் பட்டறை இவ்வளவு மோசமாகவா இருந்துள்ளது? என்ற எண்ணமே அடிக்கொரு தடவை தோன்றுகின்றது. அதற்கு நிறைய காரண காரியங்களும் இருக்கின்றன. 

இரண்டாவது சிறுபான்மை இனத்தின் அரசியல் மேய்ப்பர்களாக இருக்கின்ற இவர்கள் தொடர்பில் நமக்கு மரியாதையும் அக்கறையும் உண்டு. ஆனால், ஆடுகளை மறந்து மேய்ப்பர்கள் பயணிக்கத் தொடங்குகின்ற போது, கத்திச் சத்தம்போட்டு அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டியது ஆடுகளாகிய மக்களின் கடமையாகின்றது. அதைத் தவிர தனிப்பட்ட ரீதியில் வஞ்சம் தீர்க்கும் எந்த உள்ளெண்ணமும் இக்கட்டுரையில் இல்லை. 

லாயக்கற்ற சமூகம்

இலங்கைத் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தால் ஒரு யுகத்தையே நிறைத்திருந்தனர். சுயநிர்ணய உரிமை மீதான அவர்களது தாகமும் பேரினவாதத்தின் மீதான கோபமும், சாத்வீக போராட்டமாக, ஆயுதப் போராட்டமாக 30 வருடங்கள் வியாபித்திருந்தமை கண்கூடு. ஆனால், தமிர்களுக்கு முன்னதாகவே 1915 இலும் அதற்கு முன்னர் ஒரு தடவையும் இனக்கலவரத்தை சந்தித்த முஸ்லிம்கள் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட ஒழுங்காக நடத்த திராணியற்ற, லாயக்கற்ற சமூகமாகவே இருக்கின்றார்கள். 'இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் பரவி வருகின்றது, ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகின்றது' என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும்... ஒரணியில் திரண்டு எந்த நோக்கத்திற்காகவும் போராடுவதற்கான எந்த அடிப்படை நிபந்தனையையும் பூர்த்தி செய்யாத ஒரு இனக் குழுமமாகவே முஸ்லிம்கள் இன்றுவரைக்கும் இருக்கின்றனர் என்பதே நிஜம்.

இதற்கு காரணம் அவர்களுக்கு இடையே உள்ள பிணக்குகளும், பிளவுகளும், பிரதேசவாதமும் என்பதை சொல்லியாக வேண்டியிருக்கின்றது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரிந்து துண்டங்களாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு அரச நிறுவனத்திற்குச் சென்றால் அல்லது பல்கலைக்கழகத்திற்கு சென்றால் அங்கு பணி புரிகின்றவர்கள் தமிழர்களிடையுள்ள குல வேறுபாடுகளைப் போல – அந்த ஊர்க்காரன், இந்த ஊர்க்காரன் என்று கோஷ்டிகளாக பிரிந்துதான் கடமையாற்றுகின்றனர். அதனால், எந்தவொரு மிகப் பெரிய தலைபோகின்ற விடயத்திற்காகவும் எல்லா பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் ஒரு புள்ளிக்கு கொண்டு வருவது இன்னும் பல வருடங்களுக்கு சாத்தியமில்லை. மேற்குறிப்பிட்ட பிளவுகளுள் அரசியல் ரீதியான பிளவு மிக முக்கியமானது. 

மு.கா.வின் தோற்றத்திலிருந்து முஸ்லிம் அரசியல் என்பது வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டதாக கருதத் தோன்றுகின்றது. இன்றைய தேசிய அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டு 20 இற்கு மேற்பட்டோர் பாராளுமன்ற கதிரைகளை நிரப்பிக் கொண்டிருந்தாலும் இவர்களில் நான்கைந்து அரசியல்வாதிகளையே மக்களுக்கு பரிச்சயமிருக்கின்றது. இவர்களில் 99 வீதமானோர் அரசாங்கத்திற்கு 'முட்டுக் கொடுத்துக்' கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த 13 வருடங்களிலும் இச் சமூகத்திற்கு கிடைத்த வரவுசெலவுகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணிதமே வெட்கப்படும் நிலைதான் இருக்கின்றது. 

இதனால் சிறுபான்மை முஸ்லிம்கள் தமது தலைமைகளிலும் அரசியலிலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நம்பிக்கை இழந்தவர்களாக மாறிக்கொண்டு  வருகின்றார்கள். ஆத்திரம் மேலிடுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் 'இனி அவர்கள் வாக்குக் கேட்டு வரட்டும் பார்த்துக் கொள்வோம்'; என்று தமது இயலாமையை வெளிப்படுத்தி கழிவிரக்கம் கொள்கின்றார்கள். யுத்தத்தின் தாக்கம், போருக்குப் பின்னரான அரசியல் இறுமாப்பு, இனவாதிகளின் வெறியாட்டம், இனத்துவ உரிமை மீதன சம்ஹாரம், கடும்போக்கு சிங்கள அமைப்புக்களின் வெட்கக் கேடான காரியங்கள் ஆகியவை ஒருபுறத்தே வியாபித்திருக்க - அதற்கு எதிராக ஒன்றும்பேச முடியாதவாறு மந்திரித்து விடப்பட்டவர்களாக தமது பிரதிநிதிகள் இருப்பதும் மக்கள் இப்படியான நிலைப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உடனடிக் காரணமாகியுள்ளது. 

ஆயினும், மக்கள் பற்றி எனக்குத் தெரியும். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் 'இனி அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம்' என்று அடித்துக் கூறுவார்கள். ஆனால், கட்சிகளின் எழுச்சிப் பாடல்களிலும் தலைமைகளின் பசப்பு வார்த்தைகளாலும் வாக்களிப்புக்கு முதல்நாள் இரவு மசிந்து போவார்கள். கடைசியில் - அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி வாக்களித்து விடுவார்கள். 

பொதுவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம், தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோர் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் 'காங்கிரஸ்களின்' சொந்தக் காரர்கள் என்ற வகையில் தேசிய அரசியலில் வெகுவாக அவதானிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது அரசியல் செயற்பாட்டு தளங்கள் வேறுபட்டிருந்தாலும், எல்லோருமே முஸ்லிம்களை பிரதான மூலதனமாக வைத்து அரசியல் நடாத்துகின்றார்கள். எல்லோருடைய கடைசி இலக்கும் ஆளும் தரப்பின் கஜானாவை வாக்குகளால் நிரப்புவதாகவே இருக்கின்றது. 

ஆனால், அம்மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு நல்ல நாள் பார்க்கின்றார்கள். சக அரசியல்வாதியின் பிள்ளையின் திருமண வீட்டில் ஒன்றாக கூடிக் குலாவி ஒரே 'சஹனில்' சாப்பிடுகின்ற இவர்கள் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு எதிராக ஒருமித்து குரல் எழுப்புவதற்கு அவர்களது ஈகோ தடுக்கின்றது. 

பிளவுபட்ட தலைமைகள்

முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைமைகள் எல்லோரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது கடுமையான விவாதத்திற்குரிய விடயம். எல்லோரும் ஒன்றாகிவிட்டால் எதிர்தரப்பில் இருந்து கொண்டு செய்ய வேண்டிய வேலையை யார் செய்து முடிப்பது என்ற கேள்வி இந்த யோசனைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது. சரி அது ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் முஸ்லிம்களின் விடயத்தில் பொதுவான ஒரு விடயத்தை, உரிமையை வலியுறுத்துவதற்காகவேனும் ஒருநாளைக்கு மாத்திரம் ஒரிடத்தில் சந்தித்துப்பேசி அதன்படி செயலாற்றலாம் இல்லையா? ஆனால் அதைக் கூட செய்ய பக்குவமற்றவர்களாக இருக்கின்றமையே மனதை வருத்துகின்றது. அதனாலேயே அஸ்ரஃப் விட்டுச் சென்ற இடத்தில் முஸ்லிம் சமூகம் இன்னும் நிற்கின்றது. 

தேர்தல் காலம் வந்துவிட்டால்... தமக்குள் பகைமை பாராட்டிக் கொள்வார்கள். ஆளுக்காள் மேடைகளில் வசைபாடுவார்கள். தாம் மட்டுமல்ல, மக்களும் கட்சி ரீதியாக பிரிந்திருப்பதையே முஸ்லிம் தலைமைகள் எதிர்பார்க்கின்றனர். மக்களை குழுக்களாக பிரித்து பிரித்து வைத்திருந்தாலேயே பரஸ்பரம் போட்டி அரசியலை வளர்த்து வாக்குகளை சுருட்டிக் கொள்ளலாம். அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிட்டால் தமது பிழைப்பு படுத்துவிடும் என்ற அவர்களது கணிப்பு பிழையானதல்ல. தேர்தல் முடிந்த பிறகும் அவர்கள் இந்த பிரித்தாளும் உத்தியை கைவிடுவதில்லை. திருமண வீடுகளும் மரண வீடுகளுமே இதற்கு விதிவிலக்கு.

கடந்த தேர்தல் காலத்தில் மு.கா.வின் பிரசார மேடைகளில் அமைச்சர் ஹக்கீம் அரசுக்கும் இனவாதத்திற்கும் எதிரான கோஷங்களையே ஏகத்திற்கு முன்வைத்தார். பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு எதிராக அக்கறையுடன் பேசி மக்களிடம் வாக்குக் கேட்டார். அத்தேர்தலில் கிழக்கில் தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்தது. தம்மோடு சேர்ந்து ஆட்சி அமைக்குமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காலில் விழாத குறையாக கேட்டுக் கொண்டது. முன்னைய கால அனுபவங்களை வைத்துப் பார்க்கின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கு தவறிவிட்டது. எனவே, கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்வது பரிசீலிக்கப்பட வேண்டியது என்றாலும் ஒரு சவாலாக அதைச் செய்திருக்க முடியும். 

ஆனால் மு.கா. தலைமைத்துவம் என்ன செய்தது? சாணக்கியம், தூரநோக்கு, பேரம்பேசும் ஆற்றல் என்ற மாயச் சொற்களைக் கூறிக்கொண்டு அரசுடன் சங்கமமாகி விட்டது. இப்போது அரசு – மு.கா.வுக்கு இடையிலான தேனிலவில் ஆசையும் முடிந்துவிட்டது, மோகமும் முடிந்துவிட்டது. அதன் காரணமாக, இனவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச மயப்படுத்த மு.கா. ஆரம்பித்ததும் 'நீங்கள் அரசாங்கத்தை விட்டுப் போவதென்றால் போகலாம்' என்று சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஒருபுறம் அரசாங்கத்துடனான உறவில் ஊடல் மறுபுறம் இனவாதிகளின் கூச்சல் என்பவற்றுக்கிடையே பல்லைக் கடித்துக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர் தலைவரும் செயலாளரும். 

இன்றைய நிலைமையை வைத்துப் பார்க்கின்றபோது, அரசாங்கத்துடன் இணையாமல் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இதைவிட கௌரவமாக இருந்திருக்கலாம் என்று அமைச்சர் ஹக்கீம் கருதுவதாக தோன்றுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து செயற்படுவதற்கான காலம் கனிகின்றது என்று கூறியிருக்கின்றார். அதற்காக அரசிலிருந்து மு.கா. நாளை வெளியேறிவிடும் என்று கூற முடியாவிட்டாலும், ஏனைய முஸ்லிம் அமைச்சர்களைப் போல் இருக்காவிட்டால் அரசுடனான உறவு நிலையானதாக இருக்காது என்பதை தெளிவாக குறிப்பிட முடியும். அதற்குப் பயந்திருந்தால் நவி பிள்ளையிடம் மு.கா. அறிக்கை சமர்ப்பித்திருக்கவும் முடியாது.

ஏனைய காங்கிரஸ்கள்

முஸ்லிம் காங்கிரஸைப் போன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் பணியை செய்யாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் றிசாட் இப்போது சமூகத்திற்காக பேசத் தொடங்கியிருக்கின்றார். 'இனவாத குழுக்களின் செயற்பாடுகள் முஸ்லிம்களாகிய எம்மை கடுமையாக சிந்திக்க வைத்திருக்கின்றது. இந்த நாட்டில் வாழலாமா? தோழில் செய்யலாமா? பள்ளிவாசல் கட்டலாமா? என்ற அச்சத்தில் நாம் வாழ்கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ள அவர், இனவாதத்தின் மீதான அருவெறுப்பை பத்திரிகையாளர் மாநாட்டில் அள்ளிக் கொட்டி இருக்கின்றார். 

இனவாதத்தை எதிர்ப்பது ஆட்சியாளர்களை எதிர்ப்பதாக பெருப்பித்து காட்டப்பட்டுவிடும் என்று தெரிந்திருந்தாலும் அமைச்சர் றிசாட் அதைச் செய்திருக்கின்றார். இலங்கையில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் தலைமையில் ஹலால் ஒழிக்கப்பட்டமை, ஹிஜாப் தடைக்கு முயற்சிக்கப்பட்டமை, பள்ளிகள் உடைத்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமை போன்ற நெஞ்சு பொறுக்காத காரியங்களால் (காலம் தாழ்த்தியேனும்) றிசாட் பதியுதீன் இத் துணிவை பெற்றிருக்கின்றார். கொழும்பை மையமாகக் கொன்று சுழன்று கொண்டிருக்கின்ற முஸ்லிம் அமைச்சரிடமோ, அரசாங்கத்தை மெச்சிப் பேசும் மலைநாட்டைச் சேர்ந்த இரு பிரதியமைச்சர்களிடமோ, புகழ்பாடிக் கொண்டிருக்கும் தேசியப் பட்டியல் உறுப்பினரிடமோ மற்றைய இனவாத கட்சியிலுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிய எம்.பி.யிடமோ இவ்வாறான ஒரு உணர்வு வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. 

ஆனால் அமைச்சர் அதாவுல்லா அப்பேற்பட்டவர் அல்ல. ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளி. பிராந்திய அரசியலுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவர். அதனால் அவர் பற்றிய எதிர்பார்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. 

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பகிரங்கமாக விமர்சித்தவர் அதாவுல்லா. தொலைக்காட்சி நேர்காணலில் தோன்றி பகிரங்கமாக அறைகூவல் விடுத்தவர். புலிகள் நினைத்த மாத்திரத்தில் யாரையும் படுகொலை செய்யக்கூடிய இயக்கம் என்பது தெரிந்திருந்தும், மு.கா. போன்ற கட்சிகள் ரணில் ஆட்சியில் ஒன்றிணைத்து புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்த வேளையிலும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் புலிகளை எதிர்;த்தார் அவர். அதற்குக் காரணம் புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களாகும். (தமிழ் நண்பர்கள் மன்னிக்கவும்)

ஆனால், உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பிற்கே பயப்படாதவன் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் அதாவுல்லா, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்ற இனவாதிகளுக்கு எதிராக எதுவுமே வாய்திறந்து பகிரங்கமாக பேசாமல் இருக்கின்றாரே என்பது பெட்டிக் கடைகள் வரை பேசப்படுகின்றது. பொதுபலசேனா, ராவண பலய, சிங்கள ராவய போன்ற கடும்போக்கு அமைப்புக்களின் இனத்துவ நடவடிக்கைகளுக்கு பின்னால் பலம்பொருந்திய சக்தி ஒன்று இல்லை என்பது உண்மையென்றால்... பிழையை பிழையென்று தட்டிக் கூறுவதற்கு எதற்காக தயங்க வேண்டும் என்று தேனீர் கடையில் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்து தொலைத்தது. 

இவ்வாறான விமர்சனங்களை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத அமைச்சர் அதாவுல்லா, இவ்வாறு கேட்கின்ற எல்லோருக்குமே மௌனத்தையே பதிலாக தருகின்றார். அவரிடமிருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த நீளமான பதில் 'நான் பேசவேண்டிய இடத்தில் பேசிக் கொண்டே இருக்கின்றேன்' என்பதாகும். 

நல்லது! ஆப்படியாயின் மூன்று கட்சிகளின் தலைவர்களான 3 அமைச்சர்களும் எங்காவது பேசிக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். நன்றி உங்களுக்கு. ஆனால், அதைவிட முக்கியமானது அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான். தமிழ் கூட்டமைப்புடன்  இணைந்து செயலாற்றலாம் என்றால் ஏன் நாம் நமக்குள் இணைந்து பணியாற்ற முடியாது. எந்தக் காங்கிரஸில் இருந்து எவன் மற்றக் காங்கிரஸிற்கு தாவுகின்றான் என்ற கணக்குகளை விடவும் இது மிக முக்கியமானதும், அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியதுமாகும்.

எல்லோரும் சேர்ந்து, ஒரு கட்சி அமைத்து, ஆர்ப்பாட்டம் நடாத்தி, அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு, போராட வேண்டும் என்று கூற வரவில்லை. அது தேவையற்ற எதிர்விளைவுகளையும் கொண்டு வரலாம். மாறாக, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மத, இன அடையாளங்களை இல்லாது செய்வதற்காக கடும்போக்கு இயக்கங்கள் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான அல்லது இது குறித்து ஆட்சித் தலைமைக்கு எடுத்துக் கூறுவதற்கான முயற்சியில் எல்லா அமைச்சர்களும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளும் ஒரு பொதுவான புள்ளியில் ஒன்றிணைய வேண்டும். 

பொது எதிரியை சமாளித்த பின்னர் மீண்டும் தங்கள் பழைய பாதைகளில் பிரிந்து சென்று, மீண்டும் ஒரு தேவை எற்படுகின்ற போது மக்களுக்காக அப்புள்ளிக்கு வந்துசேரும் விதத்திலமைந்த ஒரு உறவாக அது இருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. 

அவ்வாறில்லை, முட்டுக் கொடுப்பது மட்டுமே எமது வேலை என்று நீங்கள் சொல்லிக் கொண்டு வாழாவிருப்பீர்கள் என்றால்.... ஒருகாலம் வரும். நீங்களே எழுந்து நிற்பதற்கு ஒரு 'முட்டு' தேவைப்படும் அந்த தள்ளாத நாட்களில், பார்வை மங்கிப்போன கண்களோடு இக்கட்டுரையை தேடி எடுத்து வாசித்துவிட்டு, உங்களது கைசேதத்தை எண்ணி அழுவீர்கள் - யாருக்கும் தெரியாமல். 

No comments

Powered by Blogger.