மட்டக்களப்பில் சிங்கள ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ்கள்; வழங்கப்பட வேண்டும், பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்ற வேண்டும் உட்பட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் இன்று (04) செவ்வாய்க்கிழமை காலை சிங்கள ராவய அமைப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சிங்கள ராவய அமைப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்ற சில பெரும்பான்மையினக் குடும்பங்கள் ஆகியோர் மட்டக்களப்பு மங்களராமய விகாரையிலிருந்து மட்டக்களப்பு கச்சேரிக்கு பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் கலந்துரையாடிவிட்டு, தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இதன்போது, இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனத்திற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்;. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பெரும்பான்மையின மக்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும். இம்மக்களுக்கான வதிவிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும், கிராம அலுவலகரின்; சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் மகஜரில் முன்வைத்தனர்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 106 பெரும்பான்மையினக் குடும்பங்கள் வசிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்தார். அத்தோடு பட்டிப்பளை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மங்களகம, சின்னவத்தை, கெவலியாமடு, புழுகுணாவ,சிப்பிமடுவ போன்ற கிராமங்களில் வாழ்ந்த 215 சிங்களக் குடும்பங்களை மீள்குடியேற்ற பிரதேச செயலாளர் அனுமதிக்கவில்லை எனவும் இதற்கு எதிராகவே இவ்ஆர்ப்பாட்டம் செய்வதாக சிங்கள ராவய அமைப்பின் பிரதித் தலைவர் பூலியத்தே சுதாம்ம மடில்லே பஞ்சலோக தேரர் தெரிவித்தார்.
Post a Comment