ஆசிட் வீச்சுக்குள்ளான பெண், உலகின் துணிச்சல் மிக்கவராக தெரிவு
உலகின் துணிச்சல் மிக்க பெண் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை வாஷிங்டன் மாகாண செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு லட்சுமி என்ற பெண் புதுடெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது.
பொதுவாக ஆசிட் தாக்குதலில் பாதிக்கபட்டவர்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவதில்லை. அவர்கள் பொது இடங்களுக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது முகத்தை மறைத்தே செல்கின்றனர். ஆனால் லட்சுமி அப்படி மறைக்கவில்லை.
மேலும் இவர் ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தார். இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்ற ஆண்டுக்கான விருது, டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட நிர்பயாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment