அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது ஆரம்பமாகிவிட்டது - ஆஸாத் சாலி
(JM.Hafeez)
தென்,மேல் மாகாண தேர்தல் முடிவுகள் மூலம் தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான சைகையை பெறமுடிந்துள்ளது. அந்நிகழ்வு தற்போது ஆரம்பமாகிவிட்டது என மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஆஸாத் சாலி தெரிவித்தார்.
(30.3.2014 மாலை) அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆஸாத் சாலி மன்றத்தின் அனுசரணையுடன் அஸாத் சாலி சவால் கேடயத்திற்காக இடம் பெற்ற 'சிக்ஸ் எ சைட்' கிறிகட் சுற்றுப் போட்டி இரண்டு தினங்களாக இடம் பெற்று அதன் நிறைவு விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது எதிர்காலச் சந்ததியினரின் நல்ல செயற்பாடுகளுக்கு யாரும் தடை போடக் கூடாது. ஒரு சமூகத்தின் முதுகெழும்பான அவர்கள் உடற் பலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும. வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. அதற்காக அவர்களது உடல் ஆரோக்கியம் வளரும் வகையில் விளையாட்டு உடற் பயிற்சி போன்ற துறைகளில் அவர்களை ஈடுபடுத்துதல் வேண்டும். அத்துடன் அதனை ஊக்கு விக்கவும். வேண்டும். இதன் காரணமாக ஆஸாத் சாலி மன்றம் வருடாவருடம் இவ்வாறான போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு;ள்ளது. அதன் முதற் போட்டியையே இன்று நிறைவு செய்தோம். முழுக்கண்டி மாவட்டத்;திலும் உள்ள விளையாட்டுக் கழகங்களை இணைத்து பங்கு கொள்ள வைக்க உள்ளோம். இன்று 32 அணிகள் மட்டுமே பங்கெடுத்தன.
ஆனால் ஒரு சில அரசியல் வாதிகள் இப்படியான போட்டிகளை நடத்தி இளைஞர்களது செயற்பாடுகளை முன் எடுப்பதில் எமக்குத் தடையாக இருந்தனர். இளைஞர் விவகார அபிவிருத்திப் பணிகளில் அவ்வாறு அரசியல் பேதம் காட்டுவது சிறந்ததல்ல.
முன்வைத்த காலை பின்வைக்கும் கொள்கையை நான் விரும்புவதில்லை. கண்டி மாவட்டத்தில் போட்டி இட்டு நான் அமோக வெற்றி ஈட்டினேன். கண்டி மக்கள் என்னை நம்பினார்கள். எனவே எனக்கு எத்தகைய அரச சுகபோகம் கிடைத்தாலும் கண்டி மக்களைக் கைவிட மாட்டேன். நடந்து முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் நான் போட்டி போட்டிருந்தால் விருப்பு வாக்குகளில் முதலாவது இடத்திற்கு வந்திருப்பேன். ஆனால் என்னை நம்பி வாக்களித்த கண்டி மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது. தொடர்ந்தும் நான் கண்டியுடன் தான் இருப்பேன்.
கண்டி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களைப் பொருத்வரை அவர்களது கல்விக்கு முதல் இடம் அளிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கு உறுதி மிக்க உடம்பு தேவை. எனவே விளையாட்டுத்துறையுடன் இணைந்த கல்வியை வழங்க திட்டமிட்டு வருகிறேன்.
நடந்து முடிந்த தெற்கு ,மேற்கு மாகாண சபைத் தேர்தல்கள் வெளியாகும் முன்பே நான் ஒரு யூகத்தை வெளியிட்டேன். அதுதான் இத் தேர்தலில் அரசும் தோல்வி அடையும், ஐ.தே.க.யும் தோல்வி அடையும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியும் சரத் பொன்சேக்காவின் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெறும் எனக் கணித்தேன். அதேபோல் மேற்படி பிரதான இருகட்சிகளும் தமது செல்வாக்கில் வீழ்ச்சி அடைந்தும் மற்றை இரு சிறுகட்சிகளும் முன்னரைவிட அதிக ஆசனங்களை வென்றுள்ளன.
இத்தேர்தல் முடிவு தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான சைகையை தந்துள்ளது. அது தற்போது அரம்பமாகி விட்டது என்றார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் மத்திய மாகாண அமைப்பாளர் கௌரவ கலாநிதி ஏ.ஹனீப் உற்பட மற்றும் பலர் கலந்து பரிசில்களை வழங்கினர். இறுதிப் போட்டியில் அக்குறணை லங்கேசியா அணி வெற்றி பெற்று முப்பதாயிரம ரூபா ரொக்கப் பரிசையும் ஆஸாத் சாலி சவால் கேடயத்தையும் பெற்றுக் கொண்டது. இரண்டாம் இடத்ததைப் பெற்ற லங்கேசிய ஏ அணி இருபதாயிரம் ரூபா ரொக்கப் பரிசை வென்றது. பார்வையாளர்களுக்குகிடையே நடத்தப்பட்ட பொது அறிவு போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 10 பேருக்கும் ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டன.
Post a Comment