Header Ads



ஜனாதிபதி ஒரு முழம் பாய்ந்தால்...! ரவூப் ஹக்கீம்

உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். மேல் மாகாணத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் மரச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கஹட்டோவிட்ட கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.  முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் உட்பட ஏனைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்ட அக் கூட்டத்தில்  உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

இந்த மேல் மாகாண சபைத் தேர்தலிலும் நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்த வேளையில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தலைமைத்துவம் வகிக்கும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ என்னிடம் அவர்களுடன்  சேர்ந்து கூட்டாகப் போட்டியிடுவதானால் வரவேற்கத்தக்கது என்றும் அது பற்றி ஆலோசிக்க முடியுமா என்றும் கேட்டார். முதலமைச்சர் வேட்பாளரிடமிருந்தும் அது தொடர்பில் தமக்கு அழுத்தம் தரப்படுவதாக எமது முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீமும் என்னிடம் கூறினார். 

ஆனால், களநிலவரத்தின் யதார்த்தத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தனித்துப் போட்டியிடாமல் அரசாங்க கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவது எங்களது ஆசனத்தை இழப்பதற்கே வழிகோலும். நாங்கள் தனித்துப் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தோம். ஆனால் அரசாங்கத்திற்கு அது அஜீரணமாக இருந்தது.    உபாய ரீதியாக அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை விட, நாங்கள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தான் அரசாங்கம் எங்களது பலத்தை சரிவர புரிந்து கொள்ளும். அரசாங்க கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு தோற்றுப் போவதால் அபிவிருத்தி வேலைகளை எங்களுக்கு வழமையாக செய்வதை விட சற்றுக் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு தார்மீக கடமை அவர்களுக்கு ஏற்படலாம். 

ஆயினும், இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அதை விட முக்கியமானது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து அவர்களுக்கு குற்றேவல் புரியும் சுயநலவாதிகளாக சமூகம் எங்களை பார்க்க விரும்பவில்லை. இந்தக் கட்சி பலமாகவும், தனது பேரம் பேசும் சக்தியை கொண்டதாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளும் ஆதரவாளர்களும் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.  அரசாங்க ஆதரவாளர்களுக்கு இதில் ஆட்சேபனை இல்லை. குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்களுக்கு அதை ஜீரணிக்க முடியாவிட்டாலும், பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அது வரவேற்கத்தக்கது அல்லதென்பதை களநிலவரம் உணர்த்துகின்றது.nஒவ்வொரு தேர்தல்களுக்கு முன்பும் அரசில் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி ஆராயும் போது எனது பாடுதான் திண்டாட்டமாகிப் போகிறது. அரசாங்கத்தில் இருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக்கொண்டு, தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் விளையாட்டை வைத்துக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி வற்புறுத்திக் கூறுவதுண்டு.  தனித்துக் போட்டியிட்டாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு முக்கிய அமைச்சர் ஒருவர் என்னிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். 

அரசுக்கும், முஸ்லிம் காங்கிரஸூக்கும் மீண்டும் லடாய் என்றொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேச வேண்டிய விடயங்கள்  இருந்தாலும், இந்த சமூகத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அயராது ஈடுபட்டிருக்கும் இயக்கம் என்ற காரணத்தினால், நாங்கள் தனித்துப் போட்டியிடும் விவகாரம் ஆளும் கூட்டமைப்பு உள்ளவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சந்தர்ப்பவாத கட்சியாக தென்படுகின்றது. அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அரசியல் வாதிகள் சிலர் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி ஒரு முழம் பாய்ந்தால் அவர்கள் பத்து முழம்  பாய்கிறார்கள். 

அதற்கென முகவரி இல்லாத முஸம்மில் என்ற ஆசாமி ஒருவரை வைத்திருக்கிறார்கள். அந்த நபரை நான் கொஞ்சம் கூட கணக்கில் எடுப்பதில்லை. அமைச்சர் விமல் வீரவங்ச அவருக்கு ஊடக பேச்சாளர் என்ற பதவியை வழங்கி, என்னையும் எமது கட்சியையும் தாக்குவதற்கென்றே அவரைத் தன்னோடு வைத்துக்கொண்டிருக்கிறார். முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவரை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை மட்டம் தட்டி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அப்படியானாவர்கள் பேசப் பேச முஸ்லிம் காங்கிரஸின் மதிப்பு மேலும் மேலும் முஸ்லிம்கள் மத்தியில் உயர்ந்து செல்கிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. 

முஸ்லிம் சமூகத்துடைய இன்றைய உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் எங்களுக்கு எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, சமூகத்திற்கு நடக்கின்ற அநியாயங்களை காரசாரமாக பேச வேண்டும் என்பதுதான். அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கதைக்கும் பொழுது எல்லா விடயங்களும் வெளியில் வருவதில்லை. ஏனென்றால், நாங்கள் அவற்றை வெளியில் வந்து கூறுவதால் இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகி விடும் என்பது மட்டுமல்ல, எங்களைக் காட்டிக்கொடுப்பதற்கு என்றே அரசாங்கத்துக்குள் ஒரு கூட்டம் இருக்கிறது.  இந்தப் பின்னணியில் தான் இப்பொழுது ஜெனீவா விவகாரம் பற்றி ஒரு பெரிய புரளி கிளப்பப்பட்டிருக்கிறது. இது எல்லோரும் அறிந்த விடயம். ஓளித்து மறைத்து பேச வேண்டிய விடயமல்ல. இன்றைய முன்னேறிவரும் தகவல் தொழிநுட்ப யுகத்தில் ஓரிடத்தில் நடக்கும் சம்பவம் பற்றிய செய்தி உடனடியாக உலகெங்கும் சென்று விடுகிறது. 

அரபு நாடுகள் மத்தியில் வித்தியாசமான நிலைப்பாடு ஏற்பட்டுவிட்டதென வீணாக எங்களோடு இங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் கோபிக்கிறார்கள். பொதுபல சேனா, சிஹல ராவய, ராவணா பலய போன்ற இனவாத கும்பல்களின் தீவிரவாதம் வளர்வதற்கு இலங்கை களமாக மாறிவிட்டதென்ற செய்தி அரபு உலகில் நவீன தொழில்நுட்ப வலைப்பின்னல் ஊடாகப் பரவியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். நாங்கள் சொல்லித்தான் ஏனைய நாடுகள் அவற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்பதல்ல. 

இராஜதந்திர ரீதியாக இவ்வாறான இனவாத, தீவிரவாத நடவடிக்கைகள் இலங்கையை பாதிப்படையச் செய்யும் என்பதை நான் அரபு நாட்டு பத்திரிகைகளை சுட்டிக்காட்டி வெளிவிவகார அமைச்சரிடம் கூறியிருந்தேன். இவ்வாறிருக்க இன்று முஸ்லிம் காங்கிரஸின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது அல்லது பழியை போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.  இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது பற்றி இன்று எமது சமூகத்தில் எவ்வளவுதான் கசப்புணர்வு இருந்தாலும், இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது மிகவும் பிரதானமான விஷயம். அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பது ஆபத்தானது என நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம்கள் பலர் நினைக்கிறார்கள். வெளியில் இருக்கின்ற பொழுது வரும் பாதிப்புகளை விட, அரசாங்கத்திற்குள் இருக்கும் போது அவை பற்றி கதைப்பதற்காகவது யாராவது உள்ளே இருந்தாக வேண்டும் என்பது காலத்தின் நிர்ப்பந்தம் ஆகும். 

ஆனால், இந்த யதார்த்தங்களை நாங்கள் சரிவர புரிந்துகொள்ள வேண்டும். சாணக்கியமாக விடயங்களை அணுக வேண்டும். அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால், அந்த முரண்பாடுகளை பெரிதுபடுத்தி. தூக்கிப்பிடிப்பது முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல.  ஜனாதிபதி என்மீது கோபப்பட்ட போது நான் அவரிடம் சொன்னதெல்லாம், அது நான் மட்டும் சொல்வதல்ல, பலரும் கூறுகின்ற விடயம் என்பதுதான். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் கேட்டால் தெரியவரும் என்றேன்.  என்னோடு காரசாரமாக பேசிய பின்னர் அவரது சகோதரர் பெசில் ராஜபக்ஷ அதுபற்றி என்னிடம் வருத்தம் தெரிவித்தார். 

எங்களைப் பொறுத்தவரை களநிலவரங்களைப் பற்றி உண்மைகளைச் சொல்ல வேண்டும். சில உண்மையான தகவல்களை வழங்கியது தவறான விடயமல்ல. ஜம்இய்யதுல் உலமா, ஷூரா சபை, முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் எல்லா விடயங்களையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸை அழைத்து கேட்ட போது எல்லாத் தகவல்களையும் கூறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று மிகப்பெரிய வெறுப்பு உருவாகியிருக்கிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி என்னோடு கோபித்துக்கொண்டு சூடாக பேசிய உடனேயே நான் அமைச்சர் பீரிஸிடம் சென்று உங்களைச் சந்தித்தவர்கள் கூறிய உண்மைகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே என்றேன். ஏனென்றால் இரண்டொரு வருடங்களாக தலைதூக்கி வருகின்ற இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத இயக்கங்கள் இந்தச் சமூகத்திற்கு ஒரு பாரிய அச்சுறுத்தல் மாத்திரமல்ல, அதன் விளைவாக இந்தச் சமூகம் அரசாங்கத்திலிருந்து தூர விலகிச் செல்கின்ற நிலைமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது என்ற விடயம் அமைச்சர் பீரிஸூக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.     

 ஜனாதிபதி கோபப்பட்டு காரசாரமாக பேசிவிட்டார் என்பதற்காக நான் வீட்டில் போய் மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது. அதைப் பற்றி எந்த கலக்கமும் இல்லாமல், பதற்றமும் இல்லாமல் நேர்மையாகவும் பக்குவமாகவும் விடயங்கள் சொல்லப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கிறேன். நாட்டில் ஒரு நல்லிணக்கம் வரவேண்டும், நாட்டில் நடக்கின்ற எல்லை மீறிய அசம்பாவிதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  எமது கட்சி அரசாங்கத்தோடு இணைவதில் பாரிய அதிருப்தி இருந்தது. கட்சி உறுப்பினர்களை பறிகொடுத்து விடக் கூடாதென்பதற்காகத்தான் நாம் அரசாங்கத்தோடு இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் தான் கட்சியின் பலம். எங்களிடம் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் எங்களிடம் இருந்து பறிபோய் விட்டால் நிலைமை என்ன? இந்தக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடேயே நாம் அரசில் இருக்கிறோம் என்றார்.  

2 comments:

  1. தனித்தோ - கூட்டாகவோ' கடைசியில் அமர்வது 'கூட்டாகத்தானே....' 'எல்லாம் ஒரு அரசியல் தந்திரம்தான்'

    ReplyDelete
  2. விதைத்ததை அறுத்துத்தானே ஆகவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.