கடாபியின் மகன் லிபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மகன் அல் சாடியை லிபியாவிடம் நைஜர் ஒப்படைத்துவிட்டது.
கடந்த 2011ம் ஆண்டு லிபியாவின் கிளர்ச்சியாளர்களால் கடாபி கொலை செய்யப்பட்ட பிறகு, அங்கிருந்து நைஜருக்கு கடாபியின் மகன் அல்-சாடி தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து அவரை அந்நாட்டு அரசு கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருந்தது. நீண்ட நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்-சாடியை நைஜர் அரசு நேற்று லிபியாவிடம் ஒப்படைத்தது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத லிபியா நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், திரிபோலி விமான நிலையத்துக்கு நேற்று அல்-சாடி கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து திரிபோலியில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அல்-சாடி, இத்தாலி அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து, அவரது கால்பந்து விளையாட்டு முடிவுக்கு வந்தது.
அல்-சாடி மீது லிபியாவில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டது மற்றும் கொலை செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதன் அடிப்படையில் அவர் மீது விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
Post a Comment