Header Ads



முகமது மோர்சி மீதான விசாரணை தள்ளிவைப்பு

எகிப்து நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டு ராணுவத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்ட அதிபர் முகமது மோர்சி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கபலமாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பல முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோர்சி மற்றும் 35 பேர் மீது நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் விதமாக பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் இயக்கம் உட்பட வெளிநாட்டுக் குழுக்களுடன் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இது மட்டுமின்றி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளில் மரணதண்டனை தீர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாதுகாப்பு தரப்பு வக்கீல்கள் விசாரணையை மேற்பார்வையிடும் நீதிபதிகள் குழு மாற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் கெய்ரோ நீதிமன்றம் அதிபர் மீதான விசாரணையைத் தள்ளிவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. விசாரணையை மறுபடி தொடங்குவதற்கான தேதி எதுவும் நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.