'மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்' ஒபாமா
இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் கிடக்கும் 2 பொருள்கள், மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்தப் பொருள்களை ஆராய்வதற்காக அப்பகுதிக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பியுள்ளன.
ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில், இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில், அதாவது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2,500 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கில், கடலுக்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் 2 பொருள்கள் கிடப்பது தெரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு பொருள், 24 மீட்டர் நீளம் கொண்டது. மற்றொன்று 5 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆஸ்திரேலிய கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஜான் யங் கூறுகையில், "விமானத்தை தேடும் பணியில் இதுவொரு முக்கிய தகவலாக இருக்கலாம். எனினும் அந்த பொருள்கள், அப்பகுதி வழியாக செல்லும் சரக்கு கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர் அல்லது கடல்கழிவுப் பொருளாக கூட இருக்கலாம்' என்றார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் டோனி அபாட் பேசுகையில், "மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கை தொடர்பு கொண்டு, இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் கிடக்கும் பொருள்கள் குறித்து தெரிவித்துள்ளேன். அந்த பகுதிக்கு ஒரியன் என்னும் போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 3 போர் விமானங்கள் அனுப்பப்பட உள்ளன' என்றார்.
கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் கூறுகையில், "இந்தியப் பெருங்கடலில் கிடக்கும் பொருள்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. விமானத்தை தேடும் பணியில் எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரப்பூர்வமான முதல் தகவல் இதுதான்' என்றார்.
நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும், இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதிக்கு போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பியுள்ளன.
ஒபாமா அறிவிப்பு: இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்' என்றார்.
கடந்த 7ஆம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், 13வது நாளாக வியாழக்கிழமையும் அதனை தேடும் பணி நீடித்தது.
இந்தப் பணியில் 26 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Post a Comment