Header Ads



ஓய்வு பெறுகிறார் ஸ்மித்


தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித், 33. இதுவரை 116 டெஸ்ட் (9257 ரன்கள்), 197 ஒருநாள் (6989 ரன்கள்) 33 ‘டுவென்டி–20’ (982 ரன்கள்) பங்கேற்றுள்ளார். தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இத்தொடரில் 5 இன்னிங்சில் விளையாடி மொத்தமாக 42 ரன்கள் (10, 4, 9, 14, 5) மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறியது:

கடந்த ஆண்டு ஏப்., மாதம் ஏற்பட்ட கணுக்கால் காயத்திற்கு ‘ஆப்பரேஷன்’ செய்தது முதலே, கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறித்து யோசித்து வந்தேன். தற்போது தான் சரியான நேரமாக கருதுகிறேன்.

குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவிட திட்டமிட்டுள்ளேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் எல்லாவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.  இத்தனை ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டது, ஒரு நம்பமுடியாத பயணமாகத்தான் கருதுகிறேன். தென் ஆப்ரிக்க அணிக்காக பங்கேற்றதை கவுரவமாக கருதுகிறேன். சில கடினமான தருணங்களில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு கிரேம் ஸ்மித் கூறினார்.

சாதனை கேப்டன்....

* டெஸ்ட் அரங்கில் இதுவரை எந்த கேப்டனுக்கு சாதிக்க முடியாத உயரத்தை கிரேம் ஸ்மித் எட்டியுள்ளார். இவர் மொத்தமாக பங்கேற்றுள்ள 117 டெஸ்டில், 109 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற பெருமை பெற்றார். இப்பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் (93 போட்டி) இரண்டாவது இடத்தில் உள்ளார். 

* தவிர, கடந்த 2003ல் வங்கதேச அணிக்கு எதிராக 22 யவதில் கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்மித், இளம் வயதில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெறுமை பெற்றார். சர்வதேச அளவில் மூன்றாவது வீரர் ஆவார்.

* கடந்த 11 ஆண்டுகள் இவரது தலையைில் தென் ஆப்ரிக்க 107 டெஸ்டில் பங்கேற்று, 53 வெற்றி, 27 தோல்வி, 27 ‘டிரா’ பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 48 டெஸ்ட் வெற்றி என்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்த்தார்.

* ஸ்மித் தலைமையில் தான் தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர்–1’ இடத்தை எட்டியது.

* தென் ஆப்ரிக்க அணி, இதுவரை ஸ்மித் தலைமையில் மொத்தமாக 38 இரண்டு அல்லது அதிற்கு மேல் கொண்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று அதில் 22ல் வெற்றி, 7 தோல்வி, 9 போட்டியை ‘டிரா’ செய்றுள்ளது. 

* கடந்த 2008–09க்கு பின், தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர்த்து இதுவரை தென் ஆப்ரிக்க அணி இவரது தலைமையில் ஒரு தொடரில்கூட தோல்வியடையவில்லை.  

* இரண்டு முறை ஆஸ்திரேலிய (2–1(2008), 1–0 (2012)), இங்கிலாந்து மண்ணில் (2–1(2008), 2–0(2012)) ஸ்மித் தலைமையிலான அணி, டெஸ்ட்  தொடரை கைப்பற்றி அசத்தியது. இதற்குமுன் எந்த தென் ஆப்ரிக்க கேப்டனும் இச்சாதனையை படைத்தது இல்லை.

* ஸ்மித் தலைமையில் தென் ஆப்ரிக்க அணி 149 போட்டிகளில் பங்கேற்று, 92 வெற்றி, 51 தோல்வி, ஒரு ‘டை’, 5 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

* இதுவரை 27 ‘டுவென்டி–20’ போட்டிக்கு தலைமை வகித்துள்ள ஸ்மித், 18ல் வெற்றியையும், 9ல் தோல்வியையும் சந்தித்துள்ளார்.

* சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்தமாக 347 போட்டிகளளில் பங்கேற்றுள்ள இவர், இதுவரை மொத்தமாக 17,228 ரன்கள் எடுத்துள்ளார்.

மதிப்பு கொடுப்போம்

ஸ்மித் ஓய்வு குறித்து கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவின் தலைமை நிர்வாகி லார்கட் கூறுகையில்,‘‘ஸ்மித்தின் அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும், அவருடைய முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவரது சிறப்பான செயல்பாடு மற்றும் திறமையால் தென் ஆப்ரிக்க அணி, பல வெற்றிகளை ருசித்துள்ளது,’’ என்றார்.

No comments

Powered by Blogger.