Header Ads



மகளின் பேஸ்புக் தற்பெருமையால் தந்தைக்கு 80,000 டொலர் இழப்பு

தனது மகள் பேஸ்புக் இணையத்தளத்தில் செய்த தவறால் அமெரிக்க தந்தை ஒருவருக்கு 80,000 டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தை வயது பாகுபாட்டுக்கு எதிராக வென்ற வழக்கில் கிடைக்க வேண்டிய நஷ்டஈட்டை பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மியாமியில் இருக்கும் கல்லிவர் முன்னோடி கல்லூரியின் தலைமை ஆசிரியராக இருந்த 69 வயது பட்ரிக் ஸ்னையின் ஒப்பந்தத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. இதற்கு எதிராக தொடுத்த வயது பாகுபாட்டுக்கு எதிரான வழக்கில் அவர் வெற்றிபெற்றார். அதனால் ஸ்னையிக்கு கல்லூரி நிர்வாகம் 80,000 டொலர்களை வழங்க உடன்பட்டது.

ஆனால் நஷ்டஈட்டைப் பெற அவர் கல்லூரியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் இந்த விவகாரம் குறித்த ரகசியத்தை பேணுவதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்னையின் மகள் டனா ஸ்னை தனது பேஸ்புக் பக்கத்தில், “கல்லிவருக்கு (கல்லூரி) எதிரான வழக்கில் எனது அம்மா, அப்பா வெற்றி பெற்றுவிட்டனர். இந்த கோடை காலத்தில் நான் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ள கல்லிவர் பணம் தருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். டனாவுக்கு 1200 பேஸ்புக் நண்பர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லிவர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இதனால் இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறிய ஸ்னை மீது வழக்கு தொடுக்க நீதிமன்றம் கல்லூரிக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.

No comments

Powered by Blogger.