Header Ads



முஸ்லிம் மாணவிக்கு ஹிஜாப் தடை விவகாரம் - 7 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

(Tm) முஸ்லிம்களின் உடையான ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதியரசர்கள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க,பிரியசத் டெப் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதிகளாக வித்தியாலயத்தின் அதிபர் தக்சில நயன பெரேரா துணை அதிபர் ஹேமமாலி 7 ஆம் வகுப்பாசிரியை திருமதி  நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நாவல ஜனாதிபதி வித்தியாலய மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு  உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர் முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12 ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்திற்று எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது. 

மனுவை விசாரணைக்கு எடுத்து நீதியரசர்கள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். 

No comments

Powered by Blogger.