மலேசிய விமானத்தை தேடும் பணியில் 6 நாடுகள், 22 விமானங்கள், 40 கப்பல்கள்
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி 6 நாடுகளின் கூட்டு முயற்சியுடன் நடைபெற்று வருகிறது.
வியத்நாம் மட்டுமன்றி மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 விமானங்களும், 40 கப்பல்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸூக்குச் சொந்தமான போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் தென் சீனக் கடல் பகுதியில் திடீரென காணாமல் போனது. இந்த விமானத்தில், 5 இந்தியர்கள், கனடாவைச் சேர்ந்த இந்தியர் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
இந்நிலையில், திருட்டு பாஸ்போர்ட்டில் 2 பேர் ஆள்மாறாட்டம் செய்து காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனால், விமானம் காணாமல் போன விவகாரத்தில் தீவிரவாதச் சதி இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "எதுவும் நடந்திருக்கலாம்; எதையும் மறுப்பதற்கில்லை' என்று மலேசியன் ஏர்லைன்ஸ் முதன்மை நிர்வாக இயக்குநர் அகமது ஜெளஹாரி யாஹ்யா பதிலளித்தார்.
மலேசிய பாதுகாப்பு மற்றும் தாற்காலிக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறுகையில், இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களின் தொலைந்து போன பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து 2 பேர் விமானத்தில் பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும், இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா எப்.பி.ஐ. அதிகாரிகளை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளது.
அதேசமயம், மலேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கி விட்டனர். இது குறித்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்புடைய அனைத்து நாடுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே, சர்வதேச போலீஸார் (இன்டர்போல்) கூறுகையில், "காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட்டை ஆராய்ந்து பார்த்ததில், 2 பேர் பயன்படுத்திய பாஸ்போர்ட் காணாமல் போனது அல்லது திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது' என்றனர்.
தண்ணீரில் மூழ்கியது?: இதனிடையே, காணாமல் போன மலேசிய விமானத்தின் பைலட்டுடன், மற்றொரு விமானத்தின் பைலட் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போன மலேசிய விமானம் புறப்படுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக, போயிங் 777 என்ற விமானம் ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றது.
மாயமான விமானத்தை அவசர கால அலைவரிசையில் தொடர்பு கொண்டு போயிங் 777 விமானத்தின் பைலட் பேசியபோது, பதிலுக்கு யாரோ ஒருவர் பேசியதாகவும், அலைவரிசையில் ஏராளமான தடங்கல்கள் இருந்ததால் சரியாகக் கேட்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும், தண்ணீருக்குள் மூழ்குவது போன்ற சத்தத்தை கேட்டதாகவும், அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பைலட் நியூ சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
"இறக்கை உடைந்திருந்தது': காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை 2012-ஆம் ஆண்டு சேதமடைந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி அகமது ஜெளஹாரி யாஹ்யா கூறுகையில், "காணாமல் போன அந்த விமானம் 2012-ஆம் ஆண்டில் மற்றொரு விமானத்துடன் மோதியதில், அதன் இறக்கையின் முனைப் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், அது முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மீண்டும் இயக்கப்பட்டது' என்றார்.
Post a Comment