நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம் காங்கிரஸ் 50 பக்க ஆவனத்தை சமர்ப்பித்ததா..?
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த 50 பக்க ஆவணம், சிறிலங்காவின் ஆளும் கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம், சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை நவநீதம்பிள்ளை மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பான 50 பக்க ஆவணம் ஒன்று இரகசியமாக கையளிக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும், அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தவறியது குறித்தும், இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களின் வரைபடம் மற்றும், முஸ்லிம்கள் தமது இடங்களில் இருந்து துரத்தப்பட்டது தொடர்பான வரைபடம் என்பனவும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆவணம் பற்றிய விவகாரம் நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவநீதம்பிள்ளை மூலமாக, இந்த ஆவணம் தற்போது, புலம்பெயர் தமிழர்களிடம் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளிடம் அவர்கள் ஆதரவு தேடி வருவதாகவும், சிறிலங்கா அதிபரும் அமைச்சர்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் வெளியிட்டனர்.
இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்த ஆவணம் குறித்து சிறிலங்கா அதிபர் கோபத்துடன் கேள்வி எழுப்பியதாகவும், அமைச்சர்கள் பலரும் அவருடன் சேர்ந்து கொண்டு ஹக்கீமை விமர்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment