ஏமன் கடலில் படகு மூழ்கி ஆப்பிரிக்க அகதிகள் 42 பேர் மரணம்
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்கள் ஏமனுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு அகதிகளாக வருகின்றனர்.
அது போன்று ஆப்பிரிக்காவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு ஏமனுக்கு வந்து கொண்டிருந்தது.
அப்படகு ஏமனின் தெற்கு ஷாப்வா மாகாணம் அருகே கடலில் வந்த போது தண்ணீரில் மூழ்கியது. இதனால் படகில் வந்தவர்கள் கடலில் தத்தளித்தனர்.
இதைப் பார்த்த ஏமன் கடற்படை ரோந்து வீரர்கள் படகில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் 30 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. இவர்கள் மேபா நகரில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தவிர படகில் வந்த 42 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். இவர்களில் பெண்கள் மற்றம் குழந்தைகளும் அடங்குவர்.
அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றியதால் படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே இது போன்று ஏமனுக்கு வரும் அகதிகளில் படகு அடிக்கடி விபத்துக்குள்ளாகி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment