'சேர்ட்'டை தூக்கிச்சென்ற முதலை - 4.000 ரூபாவும் பறிபோனது - திருக்கோவிலில் சம்பவம்
(Tn) தனது மேல் சட்டையை (சேர்ட்) கழற்றி குளக்கரையில் காணப்பட்ட சிறு குன்றின் மீது வைத்துவிட்டு இயற்கை கடனைக் கழிக்கச்சென்ற கால்நடை பண்ணையாளரின் மேலாடையை முதலை கெளவி நடுக் குளத்திற்கு எடுத்துச் சென்று நீரில் அழுத்திய வியப்பூட்டும் சம்பவம் சாகாமம் குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவு சாகாமம் குளக்கரையை அண்மித்ததாகவுள்ள பசு மாட்டுத் தொழுவத்தில் (பண்ணை) வழமை போன்று பண்ணையாளர் பால் சுறந்து விட்டு பசுக்களை மேய்ச்சலுக்குத் திறந்துவிட்டார்.
தனது வழமையான நடவடிக்கைகளில் ஒன்றான மாடுகள் சென்ற பின் குளக்கரைக்கு வந்து மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு காலைக் கடனை கழிக்கச் சென்றார்.
குளக்கரைக்கு திரும்ப வந்த போது தனது மேலாடை நடுக்குளத்தில் நீந்திச் செல்வதை கண்டார். அத்துடன் பாரிய முதலை ஒன்று தலை வெளியே தெரிய சட்டையைக்கொண்டு செல்வதை தோணியில் மீன்பிடிப்பவர்களும் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர்.
முதலையானது மனிதர் என நினைத்து மேலாடையை இழத்துச் சென்றதாக இப்பிரதேச பண்ணையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மீன் பிடியாளர்களோ சிறிய பாறைகளில் கொக்கு போன்ற பறவையினங்கள் தங்கி இருப்பது வழக்கமானது எனவும் முதலைகள் பறவைகளை பாய்ந்து கெளவி இழுத்துச் செல்வது வழமையான நிகழ்வு எனவும் கூறுகின்றனர்.
எது எவ்வாறோ, பண்ணையாளரின் சேர்ட் மற்றும் அதனுடன் இருந்த நான்கு ஆயிரம் ரூபா ஒருவார கால பால் விற்பனை பணமும் இழக்கப் பட்டிருப்பது கவலை தரும் விதமாக உள்ளதுடன், சாகாமக்குளப் பிரதேசம் முதலைகளின் நடமாட்டம் கூடிய பகுதியாக இருப்பது உண்மை நிகழ்வாகும்.
Post a Comment