Header Ads



எழுத்துரு மாறினால் ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் அமெரிக்காவுக்கு மிச்சம்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயின்றுவரும் 14 வயது மாணவன் சுவிர் மிர்சன்தானி ஒரு இந்திய வம்சாவளி மாணவன் ஆவான். இவன் அந்நாட்டு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சில எழுத்துகளின் உருவத்தை மற்றொரு வடிவத்தில் மாற்றி எழுதுவதன் மூலம் அமெரிக்க அரசு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் சேமிக்கமுடியும் என்ற திட்டத்தை தயாரித்துள்ளான். 

தங்களது பள்ளியில் நடைபெறும் அறிவியல் திட்டங்களின் ஒரு பகுதியாக வீணாக்குவதைக் குறைத்து சேமிக்கும் வழிகளை அதிகரிப்பது குறித்து யோசித்தபோது இந்த புதிய திட்டம் உருவானதாக அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளான். ஆரம்பப் பள்ளி சமயங்களில் உபயோகித்ததைவிட நடுநிலைப் பள்ளியில் தாங்கள் அதிகமான அச்சடிக்கப்பட்ட பயிற்சி முறைகளைப் பெறுவதை கவனித்த சுவிர் இந்த வகையில் செலவினங்களைக் குறைக்க முடியுமா என்று எண்ணியுள்ளான். 

தாங்கள் பெறும் காகிதங்களை மறுசுழற்சி மூலம் உபயோகிக்கமுடியும் என்பது தெரிந்தவுடன் அதில் செலவிடப்படும் மையில் சேமிப்பிற்கான வழிகளைக் குறித்து அவன் ஆராயத் தொடங்கினான். அப்போதுதான் எழுத்துகளின் வடிவங்கள் நான்கு வகையாக எழுதப்படுவதையும் அதில் ஒரு பிரிவில் மையின் பயன்பாடு குறைவாக இருக்கும் என்பதையும் சுவிர் கண்டறிந்தான். 

இவ்வாறு சில எழுத்துருவங்களை மாற்றிப் பயன்படுத்துவதன்மூலம் மாவட்ட அளவில் 24 சதவிகித பயன்பாட்டைக் குறைத்து ஆண்டுக்கு 21,000 டாலர்கள் சேமிக்கமுடியும் என்பதை அவன் கணக்கிட்டுக் கூறினான். இதே முறையை மாநில மற்றும் மத்திய அரசுத்துறை ஆவணங்களில் பயன்படுத்தினால் அங்கு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் மிச்சப்படுத்தமுடியும் என்பது சுவிரின் திட்டமாகும். 

கடந்த 2011 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய பத்திரிகையிலும் இவனது இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது.இதுபோல் தங்களுக்கு வந்த 200கண்டுபிடிப்புகளில் சுவிரின் திட்டமே சிறந்ததாக விளங்கியது என்று அந்தப் பத்திரிகையின் நிறுவனரான சாரா பான்க்காசர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.