4 மாத குழந்தை - 8000 ரூபாவிற்கு விற்பனை
(Tm) தனது நான்கு மாத பெண் குழந்தையை 8000 ரூபாவிற்கு விற்பனை செய்த பெண்ணொருவரையும் அதனை விலைக்கு வாங்கிய பெண்ணையும் கல்குடா பொலிஸார் சனிக்கிழமை (29) கைதுசெய்துள்ளனர்.
கல்குடா – கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயொருவரும் கோரக்கல்லிமடுவைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தாய், தனது மூன்றாவது பெண் குழந்தையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, கோரக்கல்லிமடு என்ற இடத்தில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு வெள்ளிக்கிழமை (28) விற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் குழந்தையின் தாயையும் குழந்தையை வாங்கிய பெண்ணையும் கைதுசெய்துள்ளதுடன் குழந்தையையும் மீட்டுள்ளனர்.
குடும்ப வறுமைக் காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உத்தேசித்தே குழந்தையை விற்றதாக விசாரணைகளின் போது குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முகவர் ஒருவர், மேற்படி குழந்தையின் தாயை சட்ட ரீதியற்ற வைத்தியரிடம் அழைத்துச் சென்று தாய்ப்பாலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்தினையும் செலுத்தியதுடன் வெளிநாடு செல்வதற்கான சகல ஆவணங்களையும் தயார் படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment