Header Ads



3200 ஆண்டுகள் பழமையான புற்றுநோய் பாதித்த எலும்புக்கூடு சூடானில் கண்டுபிடிப்பு

புகைப்பழக்கம், நவீன வாழ்க்கை மாறுபாடுகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றால் ஏற்படும் புற்றுநோய் சமீபகாலத்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதும் வேளையில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்று புற்றுநோய் பாதித்த நிலையில் கிடைத்திருப்பது அவர்களை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வில் ஈடுபட்டுள்ள மிக்கேலா பைண்டர் என்ற மாணவியே இந்த எலும்புக் கூட்டினைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த எலும்புக்கூட்டினை அவர் வெளியில் எடுத்தபோது, அதில் துளைகள் இருந்ததைக் கண்டு வியப்படைந்தார். எனவே இத்தகைய மனித மிச்சங்களுக்குப் பொறுப்பாளராக அருங்காட்சியத்தில் பணிபுரியும் டேனியல் அன்ட்டாய்நேவுடன் இணைந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அவர்களுடைய ஆய்வின் முடிவில் இளவயது மனிதன் ஒருவன் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்புக்கூட்டின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்படுவதன்மூலம் மரபணு மாற்றங்களைக் கண்டறிந்தால் எந்தவகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது என்பதனைக் கண்டறிய இயலும் என்றும் மிக்கேலா குறிப்பிட்டார்.

தொல்பொருள் சான்றுகளிலும் இந்த நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் 1,20,000 வயதான ஆதிகாலத்து மனிதனின் விலா எலும்பினை புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்புகளும் இத்தகைய நோய்த்தாக்கத்துடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், நோய் பரவியிருப்பதைக் காட்ட முழு எலும்புக்கூடு இல்லாமல் உறுதி செய்ய இயலாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் வடக்கு சூடானில் அமரா மேற்கு தளத்தில் கண்டறியப்பட்டுள்ள கி.மு 1200ம் ஆண்டுக்கு முந்தைய நோயுற்ற இந்த எலும்புக்கூடு புற்றுநோய் பற்றிய உறுதியானத் தகவலைத் தருவதாக உள்ளது. இந்த எலும்புக்கூடு பற்றிய விவரங்கள் பிளாஸ் ஒன் என்ற விஞ்ஞான ஆய்வறிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.