Header Ads



இலங்கை அரசாங்கம் மத சுதந்திரத்தை முன்னேற்ற வேண்டும் - அமெரிக்காவின் 2 ஆவது அறிக்கை

சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க செனட்டில் ஏற்கனவே, சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்குப் போட்டியாக, மற்றொரு தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6ம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், தீர்மான வரைவுக்கு, றிச்சர்ட் புர், றொபேட் கசே, பட்றிக் லேஹி, ஷெரோட் பிறவுண், பார்பரா பொக்சர், ஜோன் கோர்னின் ஆகிய செனட் உறுப்பினர்கள் அனுசரணை வழங்கியிருந்தனர். 

இந்தநிலையில், சிறிலங்காவில் ஈழப்போரின் போது ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு. தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க வலியுறுத்தி, 11 செனட் உறுப்பினர்கள் புதியதொரு தீர்மான வரைவை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளனர். 

ஜேம்ஸ் இன்ஹோபி, ஜோன் கோர்னின், ஒரின் ஹட்ச், ஜோன் பராசோ, ரோய் புளுன்ற், ஜோன் மன்சின். ஜெப் செசென்ஸ், ஜோன் பூஸ்மன், மைக் கிராப்போ, சுசன் கொலின்ஸ், மைக் என்சி ஆகிய செனட் உறுப்பினர்களே இதில் கையெழுத்திட்டுள்ளனர். 

இவர்களில், 10 பேர் குடியரசுக் கட்சியையும், ஒருவர் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தவர்களாவர். 

இந்த இரண்டு தீர்மான வரைவுகளையும் சமர்ப்பித்துள்ள செனட் உறுப்பினர்கள், சிறிலங்கா தொடர்பாக மனிதஉரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான கொள்கையை ஒபாமா நிர்வாகம், கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், அமெரிக்காவுக்கும், ஏனைய முக்கியமான சக்திகளுக்கும் சிறிலங்கா ஒரு மிகப்பெரிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்றும், தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரான போரில், அமெரிக்காவின் முக்கியமான பங்காளி என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிதாக சமர்ப்பிக்ப்பட்டுள்ள தீர்மான வரைவில், போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்டதாக எழும் குறைகளைக் களைய, சிறிலங்காவின் இறைமை, உறுதிப்பாடு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவு வழங்குவது குறித்து அமெரிக்காவும், அனைத்துலக சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக, தென்னாபிரிக்க பாணியிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்து காயங்களை ஆற்றலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம், மத, ஊடக சுதந்திரத்தை முன்னேற்ற வேண்டும் என்றும், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மத வழிபாட்டு இடங்கள், மீதான தாக்குதலுக்குப் பொறுப்பாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.