பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்டவர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார்
(India) பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர்.
அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு சத்ராபால் உயிருடன் கிராமத்துக்கு கடந்த திங்கட்கிழமை திரும்பி வந்தார். அவரை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சத்ராபால் கூறுகையில்,
பாம்பு கடித்து இறந்ததாக நினைத்து ஆற்றில் சடலத்தை வீசியுள்ளனர். ஆற்றில் மிதந்து சென்ற சடலத்தை பாம்பாட்டிகள் சிலர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர் என்றார்.இப்போது சத்ராபால் அவருடைய தம்பி இருவரையுமே, தனது கணவன்களாக ஊர்மிளா நினைக்கிறார். அவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தார் ஒப்புக் கொண்டால் இருவருக்கும் மனைவியாக இருக்க ஊர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்சமயத்துக்கு சத்ராபாலின் தம்பியுடன் ஊர்மிளா உள்ளார். இந்த பிரச்னையில் குடும்பத்தினர் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment