நாய்களிடம் 100 முறை கடிபட்ட 7 வயது சிறுமி
உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோரி மொழிப் பள்ளியில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டாள்.
ஒரு மாதம் கழிந்தபின் நீண்ட நாட்கள் தாங்களும் இங்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்பொருட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் ஜப்பானுக்குத் திரும்பி வர முடிவு செய்தனர். ஊருக்குத் திரும்புவதற்குமுன் கடந்த திங்கட்கிழமையன்று சகுராகோவின் குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்துக்கொண்டிருக்கும் தங்கள் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கேதான் அந்த விபரீதம் நடந்துள்ளது. அவர்கள் வீட்டில் வளர்த்துவந்த நான்கு காவல் நாய்களிடம் அந்த சிறுமி மாட்டிக்கொள்ள நேர்ந்தது. நடைபெறும் சம்பவத்தை உணர்ந்து அந்த சிறுமியை அவர்கள் காப்பாற்றுவதற்குள் அவளை 100 முறை அந்த நாய்கள் கடித்துள்ளன. இத்தனை கடிகளைப் பெற்றபோதும் அந்த சிறுமிக்கு உணர்வு இருந்துள்ளது. கவலைக்கிடமான நிலைமையில் அந்த சிறுமி ஆக்லாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அவளைத் தாக்கிய நாய்களை அந்தக் குடும்பத்தினர் கருணைக்கொலை செய்துவிட்டனர். ஆபத்தான நிலைமையைத் தாண்டாதபோதும் சிறுமியின் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி வளர்ந்த நிலையை அடையும்வரை அவளுக்குத் தொடர் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் சாக் மொவாவேனி தெரிவித்துள்ளார்.
நாய்களின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றது. சிறுமியின் நிலை குறித்து கவலை கொண்ட பார்வையாளர்கள் அவளது சிகிச்சைக்காக அந்நாட்டு பணமதிப்பில் 1,00,000 டாலர் நன்கொடை அளித்துள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவித்துள்ள சகுராகோவின் குடும்பத்தினரோ, அவள் மீண்டுவர இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post a Comment