கொலைக்குற்றவாளிகள் 10 பேருக்கு மரண தண்டனை - 10 ஆண்டுகளின் பின் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
(Tn) கண்டி பிரதேசத்தில் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கண்டி மேல் நீதிமன்றம் 27-03-2014 இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி இரத் தோட்டை பொலிஸ் பிரிவில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அடையாளங் காணப்பட்டதையடுத்து மரண தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கியது. மூவர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் வழக்கு விசாரணைகளின் போது மரணமடைந்துள்ளார்.
இரத்தோட்டையில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஐயாஹ¥ முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப் பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபரின் கடும் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கண்டி மேல் நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த சமயத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நேற்று இவ்வழக்கு விசாரணைகளின் போது நீதிவான் 13 எதிரிகளில் 10 பேரை குற்றவாளியாகக் கண்டு மரண தண்டனை விதித்ததுடன் ஏனைய மூவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து பேரின் பெயர்கள் வருமாறு:
1. திஸ்ஸ பண்டார,
2. விஜே பண்டார,
3. புன்னியமூர்த்தி அல்லது வைட்டா
4. விஜேகாந்த்
5. யோகேஷ்வரன்
6. ரஞ்சித் தினதா
7. யோகராஜா
8. சிவசாமி சிவா
9. ராமநாதன் அப்துல்லா
10. ராஜதுரை இளையராஜா
Post a Comment