நாம் தற்பொழுது நரகத்தின் வாசலில் நிற்கின்றோம் - சரத் பொன்சேகா
மந்தமான புத்தியை கொண்ட ஜனாதிபதிக்கு ஆச்சரியம் என்ன என்பது புரியாது எனவும் மக்கள் தேடிக்கொண்டிருந்த மாற்று சக்தி தமது கட்சியே எனவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாத்தறை, வெலிகம - கனன்கே பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மந்தமான புத்தியுள்ள நாட்டில் ஆட்சியாளர் ஆசியாவின் ஆச்சரியம் பற்றி பேசினாலும் நாட்டில் அப்படியான எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆச்சரியம் என்பது என்ன என்பதும் ஆட்சியாளருக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது நாம் எப்படி ஆசியாவின் ஆச்சரியமாக முடியும்?. நாட்டின் வருடாந்த தனி நபர் வருமானம் இரண்டாயிரம் டொலர்கள். முட்டாள்தனமாக ஆட்சியாளர்களுக்கு இது புரியவில்லை.
எம்மை பொறுத்த வரை இன்றைய ஆட்சியாளர் இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தால், நாடு ஆசியாவின் நரகமாக மாறிவிடும். தற்பொழுது நாம் நரகத்தின் வாசலில் நிற்கின்றோம். எமராஜானும் அவரது தூதர்களும் மக்களை பயமுறுத்த காத்திருக்கின்றனர்.
நாட்டின் ஆட்சியாளர் கடந்த காலத்தில் விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டிருப்பதை பார்த்து புரண்டு புரண்டு கம்பளத்தை முத்தமிட்டார்.
அது தேசப்பற்று அல்ல வாமன உருவங்களும், மண்ணாசை பிடித்தவர்களும், மக்களை சுரண்டி திண்பவர்களுமே மண்ணை முத்தமிடுவார்கள்.
பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும் எங்கள் குடும்பத்தை பழிவாங்கவில்லை. எனது முத்த மகளின் கணவரை 4 வருடங்களாக காண முடியவில்லை. ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரே அவர் மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியில் வர முடியும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment