Header Ads



நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் டாக்டர் மாகிருக்கு பிரியாவிடை நிகழ்வு

(Umar Ali Mohamed Ismail)

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில்  கடந்த மூன்றரை  வருடங்களாக மாவட்ட வைத்திய அதிகாரியாக  கடைமையாற்றி  ஊர் மக்களதும்,ஊழியர்கள் மனத்திலும்  நீங்காத இடத்தைப்பிடித்த  டாக்டர் எம் சி எம்  மாகிர் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை  மாநகர சபைக்கான வைத்திய அதிகாரியாக கடந்த  22 ஆம்  திகதி கடமையை பாரமேற்றுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர்  முற்றாக அழிவுக்குட்பட்டு  செஞ்சிலுவை சங்கத்தின்  நிதியுதவியினால் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையின்  மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய  டாக்டர் நிகால் அவர்களிடம் இருந்து  கடமையை பொறுப்பேற்ற  டாக்டர் மாகிர்,நோயாளர் பராமரிப்பின் தரத்தினை அதிகரிப்பதற்காக  தன்னை முற்றுமுழுவதுமாக  அர்ப்பணித்தார்,

பொதுமக்களுடனும் ,வைத்தியசாலை அபிவிருத்திக்குளுவினருடனும்,பிரதேச அரசியல்வாதிகளுடனும்,வைத்தியசாலை ஊழியர்களுடனும் மிகவும் அன்னியோன்யமாக உறவைப்பேணிய அவர்  வைத்தியசாலையின் சேவையை அதிகரிப்பதற்கான  உயரிய பங்களிப்பைச்செய்தார்,

விசேட வைத்திய நிபுணர்கள்,கதிர்படப்பிடிப்பு  போன்றவற்றை ஆரம்பித்துவைத்ததுடன்,இவ்வைத்தியசாலை நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நோயாளர் பராமரிப்பிற்கான ,உற்பத்தித்திறன்,''ஐந்து எஸ்' போன்றதுறைகளிற்கான போட்டிகளில் வெற்றிபெற்று மாகாணத்தில் முன்மாதிரியான ஒரு வைத்தியசாலையாக திகழ்வதற்கு   பாடுபட்டார்.

சிறந்த ஆழுமையுள்ள  ஒரு நிருவாகியான  இவரிற்கான பிரிவுபசார வைபவம்  புதிதாக கடமையேற்றுள்ள மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டார் ஆகில் சரிபுடீன் அவர்களது வழிகாட்டாலில்,வைத்தியசாலை  நலன்புரிச்சங்கத்தினரது ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில்  இன்று (02 02 2014  ஞாயிறு ) வைத்தியசாலையின்  கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டதுடன் அண்மைக்காலமாக  ஒய்வு பெற்றவர்களும்,இடமாற்றம் பெற்றுச்சென்றவர்களும்  அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில்  முன்னாள் மாவட்ட  வைத்திய அதிகாரி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்,வாழ்த்துப்பா பாடி வாழ்த்துப் படிகமும்,நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில்  மூத்த உதவி வைத்திய அதிகாரி  டாக்டர் அல்ஹாஜ்  ஜாபிர் அவர்கள் அன்னாரின் சேவையைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்,

டாக்டர் மாகிர் தனது உரையில்  புதிய மாவட்ட வைத்திய அதிகாரி தன்னை விட சிறப்பாக செயற்படுவார் என்று தான் நம்புவதாகவும்,தனக்கு எவ்வாறு இந்த வைத்தியசாலை ஊழியர்கள் ஒத்துளைத்தார்களோ  அதுபோலவே  அவருக்கும் ஒத்துழைக்க வேண்டும் வினயமாக வேண்டுவதாக கூறினார்....

நிந்தவூர் மக்களின்  மனதில் ஒரு இனிய  தடமாக  பதிந்திருக்கும் டாக்டர் மாகிர் அவர்களது  சேவைக்காலம்  யாராலும் மறக்க முடியாததாகும்.



No comments

Powered by Blogger.