பரீட்சை மண்டபத்தில் பிள்ளை பெற்ற மாணவி
இந்தியா - பீகாரில் பிளஸ் 2 தேர்வு எழுதி கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு, தேர்வு அறையிலேயே பிரசவம் நடந்தது. பீகாரில் கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. இதற்கான மாநிலம் முழுவதும் 882 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 9 லட்சத்து 81 ஆயிரத்து 778 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 662 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஒரு காலத்தில் கல்வியில் பின் தங்கியிருந்த பீகார் மாநிலத்தில் இவ்வளவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.
சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை மனிஷா தேவி (20) என்ற இளம்பெண் தேர்வு எழுதி கொண்டிருந்தார். இவருக்கு திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தேர்வு எழுதி கொண்டிருந்த போதே மனிஷாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் மனிஷாவுக்கு வலி அதிகரித்தது. உடனடியாக தேர்வு அறையிலேயே பிரசவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
அதன்பின் ஆம்புலன்சில் தாயையும் குழந்தையையும் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் தற்போது நலமாக உள்ளதாக கல்லூரி ஊழியர் எஸ்.கே.சிங் தெரிவித்தார்.
Post a Comment