கடத்தப்பட்ட, காணாமல் போன முஸ்லிம்களின் நிலை என்ன..?
காணாமல் போனோர் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு காத்தான்குடி,காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்களிலிருந்து காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை திரட்டி காணாமல் போனோர்களின் முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நடவடிக்கை எடுத்திருந்தார்.அதற்கு அடிப்படை காரணமாக இருந்த விடயம் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு ஓரிரு மாதங்கள் கழிந்ததன் பிறகு கூட முஸ்லிம்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களோ,பொது நிறுவனங்களோ,அரசியல் தலைமைகளோ,சிறிய அரசியல் குழுக்களோ எவ்விதமான முன்னெடுப்புகளையும் எடுக்காத நேரத்தில் இது சம்பந்தமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற ஓர் காலத்தின் கட்டாயம் ஏற்பட்டதன் காரணமாகவும், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு சொல்லுமுகமாகவும், காணாமல் போனோரில் கணிசமான எண்ணிக்கையினர் முஸ்லிம்களில் இருக்கின்றனர் என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் இதனை பள்ளிவாயல்களினூடாகவும், இணையத்தளங்களின் ஊடாகவும், பத்திரிகைகளின் ஊடாகவும்,இதற்கான தகவல்களை சேகரித்து ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இது காத்தான்குடி,காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்கள் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினுடைய மொத்த காணாமல் போனோரின் விபரங்களை திரட்ட வேண்டும் என்றும் அதே போன்று வட மாகாணத்தில் காணாமல் போன முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட வேண்டும் என்றும் அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இந்த தகவல் சேகரிப்பை விஸ்தரிக்குமுகமாக வடக்கு,கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதான ஜூம்மா பள்ளிவாயல்கள்,உலமா சபைகளுக்கும் தபால் மூலமாக இதனுடைய விபரங்களை சரியான முறையில் விபரித்து அதற்காக ஆணைக்குழுவினால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினையும் கௌரவ பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்.
அதனூடாகவும் கணிசமான எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அது மட்டுமல்லாது காத்தான்குடி,காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 112 விண்ணப்பங்களையும் நேரடியாக கௌரவ பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் உட்பட்ட குழு ஆணைக்குழுவுக்கு 29.11.2013ம் திகதி சென்று ஆணைக்குழுவின் தலைவர் உட்பட்ட உயர்மட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நேரடியாக கையளித்தது மட்டுமல்லாமல் 03 பிரதான கோரிக்கைளை முன்வைத்தார்கள்.
அதில் முதலாவதாக காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை ஆராய்ந்து அவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் இடங்களை கண்டறிவதனூடாக அவர்களுடைய உடல்களை அல்லது எச்சங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி மீண்டும் அடக்கம் செய்வதற்கு உதவ வேண்டும்.இரண்டாவதாக அவ்வாறு காணாமல் போனோர் சம்பந்தமான ஆவணங்களை பரிசீலித்து அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அல்லது இதுவரையில் காணாமல் போனோராக இருந்தால் அவர்களடைய குடும்பங்களுக்கு போதியளவான நஷ்டஈட்டை கொடுக்க வேண்டும்.மூன்றாவது அவ்வாறு தோண்டி எடுக்கப்படுகின்ற முஸ்லிம்களின் உடல்களை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தி சர்வதேசதரீதியாக யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகம் வடகிழக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் என்பதை தெரியப்படுத்துவதனூடாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சர்வதேசமயப்படுத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. மிக நீண்ட நேரமாக ஆணைக்குழுவின் தலைவருக்கும்,அதன் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் நடந்தேறிய கலந்துரையாடலில் 30 வருட காலத்தில் கிழக்கிலே நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்,ஆள்கடத்தல்,கொலைகள் என்று விளாவாரியாக தகவல்கள் பரிமாறப்பட்டன.
இதன் போது முக்கியமாக 1990களில் கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்த முஸ்லிம்களில் ஒரே நாளில் 68 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை ஆணைக்குழுவின் தலைவரிடம் எடுத்துக்கூறி அவ்வாறு அவர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதையுண்டு இருக்கலாம் என்று சந்தேகப்படும் இடங்களை தோண்டுவதன் மூலமாக அவர்களுடைய உடல்கள் அல்லது அதன் எச்சங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதன் மூலமாக போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேசம் தமிழர்களுக்கு மட்டுமல்லாது முஸ்லிம்களின் பக்கமும் தங்களுடைய கவனப்பார்வையை திருப்ப வேண்டும் என்பதை அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுடைய உடல்கள்,அதன் எச்சங்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு இப்படுகுழிகள் தோண்டுவதன் மூலமாக இடம் கிடைக்குமென வலியுறுத்தி ஆணைக்குழுவின் தலைவரை கேட்ட போது, அதற்கான முழுநடவடிக்கையையும் தான் எடுப்பதாகவும,; இது சம்பந்தமாக சட்டமா அதிபருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.இந்த செய்தி டிசம்பர் மாதம் வெளியாகிய 'முஸ்லிம் முரசு' 31வது இதழ் பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக '67 ஹாஜிகளின் உடல்களை தோண்டி எடுக்க முடிவு' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது.
அதனடிப்படையில் ஆணைக்குழுவின் தலைவர் இது சம்பந்தபாக நடவடிக்கை எடுக்குமுகமாக எங்களுடன் பேசுவதற்கு அழைத்திருந்தார்.அதனடிப்படையில் நாங்கள் அவரை சந்தித்த போது முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட புதைகுழிகளை தோண்டுவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும்,உடல்களை அடையாளம் கண்டுகொள்ளுமுகமாக நெருங்கிய உறவினர்களின் வாக்கு மூலத்தை பெறுவதோடு அவர்களுடைய இரத்த மாதிரிகளை பெற்று மரபனு பரிசோதனைகளினூடாக உடல்களை அடையாளம் காண்பது என்றும் அதற்காக நெருங்கிய உறவினர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.அத்துடன் காணாமல் போனோரின் விபரங்கள் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற மொத்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் 5000 ஆக இருக்கலாம் என்றும் சரியான தொகையினை மிக விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.மேலும் இது வரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் இதற்கான விசாரனைகளை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு ஆணைக்குழு நேரடியாக விஜயம் செய்து விண்ணப்பங்களுடைய உறவினர்களை விசாரிப்பதனூடாக அவர்களுக்குரிய நஷ்டஈட்டுக்குரிய முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறினார்.விசாரனைகள் முடிந்ததன் பின்பு முஸ்லிம்களில் காணாமல் போனோரின் இழப்புகள் சம்பந்தமான பூரண ஆவணத்தை சர்வதேசத்திற்கு வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.
ஆக முஸ்லிம்கள் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்ற போது அவ்வப்போது கண்டெடுக்கப் படுகின்ற மண்டை ஓடுகளும்,மனித எச்சங்களும் முஸ்லிம்களுடையதாகவும் இருக்கக்கூடும் என இப்பொழுது சந்தேகம் ஏற்படுகின்றது.1990க்குப் பிந்திய காலங்களில் முஸ்லிம்களில் தற்போது கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி 5000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதை பார்க்கும் போது அதிகமான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை எங்களால் உணர முடிகிறது.அவ்வப்போது தோண்டி எடுக்கப்படுகின்ற மண்டை ஓடுகளும்,மனித எச்சங்களும் குறித்த ஓர் இனத்தை சார்ந்தது என்று வாதிடுவதை ஏற்க முடியாமல் உள்ளது.எந்த ஒரு மண்டை ஓட்டிலும் அது சார்ந்திருந்த மதம் விளங்குவதில்லை.
ஆகவே பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கடத்தப்பட்டிருப்பதாலும்,அவர்கள் இதுவரை மீண்டு வராமல் இருப்பதாலும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.ஆக கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களை சரியான முறையில் விசாரனை மேற்கொள்வதனூடாக அது சம்பந்தமான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உரிய நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.
Post a Comment