பௌத்த குருமாரின் அரசியலுக்கு 'ஆப்பு' வைக்கப்படுமா..?
பௌத்த குருமார் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றமையை தடைசெய்யும் வகையில் அமரபுர ஸ்ரீசத்தம்ம வர்க்க நிக்காயவின் சுதர்ம பிக்குகளின் தீர்மானம் இன்று அமரபுர நிக்காயவின் ஏனைய 21 நிக்காய பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரபுர நிக்காயவின் பிரதி செயலாளர் கொஸ்கொட ஸ்ரீமித்த தேரர் இதுபற்றி கூறுகையில், அமரபுரவின் பிரதான இரண்டு பிரிவுகளான சியம் மற்றும் ராமஞ்ய நிக்காயக்களிலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், அமரபுர ஸ்ரீசத்தம நிக்காயவில் அங்கம் வகிக்கின்றார். இந்த நிலையில், நிக்காயவின் தீர்மானம், அவரின் அரசியல் பிரவேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
...........................................................
அமரபுர சிறிசத்தம வங்ஷிக பௌத்த பீடத்தின் சுதர்ம்மாகாரக சங்க சபையினால் தமது பீடத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எடுத்துள்ள தீர்மானம் அந்த பீடத்தின் பிக்குவான அத்துரலிய ரத்ன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பிக்குமார் அரசியலில் ஈடுபடக் கூடாது என தடைவிதித்து எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இதுவரை எவ்விதமான விளக்கங்களையும் அந்த பௌத்த பீடம் முன்வைக்கவில்லை எனவும் ஏதாவது தீர்மானம் ஒன்றை எடுக்கும் போது சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாட வேண்டும் எனவும் ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்ஆபே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதால், அரசியல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது அவருடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
பௌத்த பிக்குமார் அரசியலில் ஈடுபடக் கூடாது என அவர்கள் தீர்மானம் எடுக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட தரப்புடன் அவர்கள் கலந்துரையாட வேண்டும்.
குறிப்பாக தற்பொழுது அரசியலில் ஈடுபட்டுள்ள பிக்குமாரின் கருத்துக்களை அவர்கள் கேட்டறியவில்லை. ரத்ன தேரர் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் முன்னர் அவருடன் பேசியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை.
பலவந்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்ன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. மறுபுறம் தேவையற்ற நேரத்தில் தேவையற்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment