Header Ads



யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்...? இயக்குநர் அமீர் விளக்கம்

இசைஞானி இளையராஜாவின் 2வது மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, தான் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். யுவனின் இந்த டுவிட்டர் அறிவிப்பு கோலிவுட்டையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது. இதற்கிடையே யுவனுக்கு, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இயக்குநர் அமீர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அமீரை நாம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில்கள் வருமாறு...

யுவன் போக்கில் மாற்றம்

பாலா சாரின் நந்தா படம்பண்ணும் போது யுவன் எனக்கு அறிமுகம். அப்போது வெளிஉலகமே தெரியாத பையனாக இருந்தார் யுவன். ஸ்டுடியோவில் மியூசிக் கம்போசிங், ரெக்கார்டிங் பின்னர் அது முடிந்தால் வீடு என்று இருந்தார். பின்னர் அவரது அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக அவருக்கு இயக்குநர்கள் வட்டாரம், நண்பர்கள் வட்டாரம், சினிமா வட்டாரம் என்று நட்பு பெருகியது. இரண்டு மூன்று ஆண்டுகளில் அவரது போக்கும் மாறியது. பார்ட்டி, ஆட்டம் - பாட்டு, கொண்டாட்டம் என்று திரிந்தார். அப்போது நான் யுவனிடம் வாழ்க்கையை நாம் சரியாக தேடி போகணும், நாங்கள் எல்லோரும் சினிமாவை தேடி போனோம், ஆனால் உன் விஷயத்தில் அப்படி இல்லை, சினிமா உன்னைத்தேடி வந்தது. அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமைந்தது. அதை பயன்படுத்திக் கொள் என்றேன்.

பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை

பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.

என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது

ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்.

No comments

Powered by Blogger.