போக்குவரத்து பொலிஸாருடன் தகராறு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்மல் கைது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வலதுகை ஆட்டக்காரரான உமர் அக்மல்(23) சில நேரங்களில் அவர்களது அணியின் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரர்களான கம்ரன் மற்றும் அட்னன் ஆகியோரும் விக்கெட் கீப்பர்களாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளனர்.
உமர் அக்மல் இன்று காலை லாகூரில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து சிக்னல் ஒன்றை மீறி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்று காவல்துறை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் காவலில் இருந்த சார்ஜென்ட்டின் சீருடையை அக்மல் கிழித்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை விசாரணை அதிகாரி ஜாஹித் நவாஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அக்மல், சார்ஜென்ட் குறித்த புகாரினை அளிக்க தான் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் வந்த இடத்தில் தன்னைக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போக்குவரத்து சிக்னல் அருகே இருந்த கண்காணிப்புக் காமிராவில், நடந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனைப் போட்டுப் பார்க்கும்போது தன்னுடைய பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கம் விலகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment