Header Ads



அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க சீனாவுடன் கலந்துரையாடல்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புத் தூதுவராக சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன உதவி அதிபர் லி யுவான்சாவோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக,  வெளிவிவகார அமைச்சர் சீனா சென்றுள்ளார். 

அவர் நேற்று பெய்ஜிங்கில் சீன உதவி அதிபரைச் சந்தித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சார்பில் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார். 

இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கும், மூலோபாய ஒத்துழைப்பு பங்காளர் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பும் இணங்கியுள்ளன.

இருதரப்பு உறவுகள் உறுதியாக வளர்ச்சி பெற்று வருவது குறித்து, வரவேற்புத் தெரிவித்துள்ள சீன உதவி அதிபர், கடந்த ஆண்டு இருநாடுகளுக்கும் இடையிலான உறவை, மூலோபாய ஒத்துழைப்பு பங்காளர் என்ற நிலைக்கு தரமுயர்த்துவதாக இருநாட்டுத் தலைவர்களும், அறிவித்ததை அடுத்து, சிறிலங்கா - சீன உறவுகள் புதிய கட்டத்துக்குள் பிரவேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்போது, சிறிலங்கா எல்லா சவால்களையும் எதிர்கொள்வதற்கு சீனா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சீன உதவி அதிபர் உறுதியளித்துள்ளார். 

முன்னதாக நேற்றுக்காலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த, சீன வெளிவிவகார அமைச்சரும் இதற்கான உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.