இலங்கையை நோக்கி படையெடுக்கும் சீனர்கள்..!
(எம்.எம்.ஏ.ஸமட்)
கடந்த ஜனவரியில் மாத்திரம் 10,779 சீன உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலைகளின் காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கைச் சுற்றுலா அபிவிருத்திச் சபையின் புள்ளிவிபரங்களின் படி கடந்த 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 3,328 சீன உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ள போதிலும், இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் மும்மடங்கான சீன உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சென்ற 2013ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை விடவும் 2014 ஜனவரி மாதத்தில் வந்துள்ள உல்லாசப் பயணிகளின் வருகையானது 32.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. 2013இன் ஜனவரி மாதத்தில் 110,543 வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், கடந்த ஜனவரியில் மாத்திரம் 146,575 உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபையின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், ஜனவரி மாதத்தில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் தென் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளவர்கள் 22.4 வீதமாகவும், அமெரிக்க உல்லாசப் பயணிகள் 31.5 வீதமாகவும், கனடாவிலிருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் 12.7 வீதமாகவும் உள்ளதுடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 46,301 உல்லாசப் பயணிகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 24,837 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வந்துள்ளனர்.
அவற்றுடன், ரசிய உல்லாசப் பயணிகள் 10,700 பேரும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 6,842 பேரும்,அண்டை நாடான இந்தியாவிலிருந்து 28,392 பேரும் உல்லாசப் பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.
2013ம் ஆண்டில் 1.2 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்காகக் கொள்ளப்பட்டவேளை, அது 2012ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் 26.7 வீத அதிகரிப்பைப் கொண்டிருந்தது. 2013 ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் வருகை தந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் மூலம் 1.23 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன் 2014ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment