Header Ads



காலனித்துவ சக்திகளின் அதிகாரத்திலிருந்து விடுபடுவோம் - ஜனாதிபதி மஹிந்த சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

‘66 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணத்தை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்து வரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிவினைவாதப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்ததன் மூலம் எமது சுதந்திரம் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை விரைவுபடுத்தியுள்ளோம். 

இது துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், சக்தி, வலு போன்ற நவீன உட்கட்டமைப்புகளையும் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் புதிய போக்குகளையும் உள்ளடக்கிய புதிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மூலோபாயங்களை வேண்டி நிற்கிறது. அபிவிருத்திக்கான புதிய முன்னெடுப்பில் இவற்றில் அநேகமானவை ஏற்கனவே அடையப்பெற்றுள்ள நிலையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அடையப்பெற வேண்டிய பல விடயங்கள் இன்னும் எஞ்சியுள்ளன.

எமது கடந்தகால மகிமையை மீண்டும் ஏற்படுத்தவும் எதிர்கால வெற்றிகளை நோக்கி வேகமாகப் பயணிக்கவும் அதனூடாக எமது சுதந்திரத்தைப் பலப்படுத்தவும் சிறந்த வழி சுதேச திறமைகளையும் அறிவையும் விருத்தி செய்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளதென்பது எமது நம்பிக்கையாகும்.

சுதந்திரத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் இறைமையையும் ஆள்புல எல்லையையும் பாதுகாப்பதற்காக துணிச்சலுடன் முன்வந்த எமது பாதுகாப்புப் படை உறுப்பினர்களை நாம் ஆழ்ந்த நன்றியோடு நினைவுகூர வேண்டும். நாம் சுதந்திரமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்கு அவர்கள் செய்த பாரிய தியாகங்களை நாம் எப்போதும் மதிக்கவும் அதற்காக நன்றிகூறவும் கடமைப் பட்டுள்ளோம்.

நீதி மற்றும் மனிதாபிமானத்திற்கான அர்ப்பணத்துடன் கூடிய எமது அணிசேராக் கொள்கை காரணமாக அண்மைய தசாப்தங்களில் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பல நட்பு நாடுகள் எமது பிரச்சினைகளையும் சவால்களையும் நன்கு புரிந்துகொண்டுள்ளதுடன், சர்வதேச பொதுத் தளங்களில் எமக்கு உதவவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

ஒரு ஐக்கிய தேசத்தில் ஒரே கொடியின் கீழ் இலங்கை தேசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற உங்களது கனவை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இதனை அடைந்து கொள்வதற்கு நாம் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கு புவியியல் மற்றும் சமூக தடைகளைத் தாண்டிய தேசப்பற்றும் பலமானதும் உறுதியானதுமான நல்லிணக்கமும் அவசியமாகும். 

எமது கடந்த காலத்திலிருந்து நாம் பெற்ற ஊக்கத்துடனும் புதிய அடைவுகளிலிருந்து பெற்ற பலத்துடனும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஒரு தேசத்தை எமது எதிர்கால பரம்பரையினருக்கு விட்டுச் செல்வதற்கான ஒரு பலமான அடித்தளத்தை இதன்மூலம் இடமுடியும்.

நாம் வென்றெடுத்த சமாதானம் மற்றும் சுதந்திரத்தினூடாக எமது தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் அத்தகையதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றுசேர்ந்து உறுதிபூணுவோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.