நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை மேற்கொள்ளமாட்டோம் - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக, வெளிநாட்டுச் சக்திகளின் அடிவருடி இயக்கமாக, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இயக்கமாக இன்று சிலர் சித்தரித்து வருகின்றனர். எவர் எவ்வாறு எம்மைப்பற்றி விமர்சித்த போதிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தை ஒருபோதும் எமது இயக்கம் மேற்கொள்ளாது என்பதனை இந்த 66வது சுதந்திர தின நிகழ்வில் நாம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இந்த நாட்டிற்குப் பிரகடனம் செய்து வைக்கின்றோம்'
'அதேவேளையில் இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களுக்கும், அவர்கள் பின்பற்றி வருகின்ற சமயங்களுக்கும், அம்மக்களின் பாரம்பரியமான பண்பாட்டுக் கலாசார விழுமியங்களுக்கும் விரோதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கும், அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும், வன்முறைகளுக்கும் எதிராகவும் நாம் குரலெழுப்பி இந்த நாட்டில் பாரபட்சமற்ற நல்லாட்சி நிலவவும், அச்சுறுத்தலற்ற இலங்கையைக் கட்டியெழுப்பவும் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.'
இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத் தலைமையக மக்கள் அரங்கில் இன்று காலை நடைபெற்றபோது அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு பிரகடனம் செய்தார்.
அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை 'பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். நல்லாட்சி எனும்போது அங்கு பங்கேற்பு என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகக் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய நிகழ்வில் பலசமயங்களின் மதத் தலைவர்களும், நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரும், பொதுமக்களும் இங்கே பங்கேற்றிருக்கின்றோம்.'
'எமது இயக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் குரல் கொடுப்பதற்காகவும், பங்களிப்புச் செய்வதற்காகவும் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்ல. இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து சமயங்களையும், சமூகங்களையும் சார்ந்த மக்களுக்காகவும் குரல் கொடுப்பதற்காகவும், எல்லா மக்களுக்கும் சமமான நீதியையும், நியாயத்தையும் கோரி குரல் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.'
'காத்தான்குடிப் பிரதேசத்தில் எட்டு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று பிரதேசம் கடந்து மாவட்ட, மாகாண மட்டங்களிலும், தேசிய மட்டத்திலும் தன் பணியையும், பங்கையும் ஆற்றி வருகின்றது. முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு ஏனைய இந்து, கிறிஸ்தவ, பௌத்த சமய சமூகங்களையும் சேர்ந்த மக்களுக்காகவும் நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.'
'யுத்தத்தின் பின்னரான இலங்கை இன்று சர்வதேசத்தின் பார்வையில் ஒரு முக்கியமான தளத்தில் நின்று கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின் இந்நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த சமாதானம், ஐக்கியம், சகவாழ்வு, தேசிய பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றை இந்நாட்டில் கட்டியெழுப்புவதற்காக நாமும் எம்மாலான பங்களிப்புக்களை மிக விவேகமாக மேற்கொண்டு வருகின்றோம்.'
'இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக எமது முன்னோர்கள் சமய, சமூக வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து ஒழைத்த வரலாறுகள் எமக்கு முன்னே இருந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை மர்{ஹம் ரி.பி. ஜாயா போன்ற தலைவர்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக ஆற்றிய பங்களிப்புக்களை இத்தருணத்தில் நாம் நினைவு கூறுகின்றோம். அதேபோல் ஏனைய ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த சமய சமூகத் தலைவர்களும் எமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பங்கேற்று உழைத்துள்ளதையும் நாம் நினைவில் பதித்துள்ளோம்.'
'அனைத்து மக்களினதும், சமய சமூகத் தலைவர்களின் பங்கேற்புடனும் சுதந்திரமடைந்த எமது நாடு, இன்று சிறுபான்மைச் சமய சமூக மக்களின் உரிமைகளையும், சுதந்திர வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் ஒரு சங்கடமான சந்தியில் வந்து நின்று கொண்டிருப்பது எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அந்த வகையில் சிறுபான்மைச் சமய, சமூக மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், அவர்கள் மீது இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது'
'இந்நாட்டில் வாழுகின்ற எல்ல இன, சமய, சமூக மக்களும் சமத்துவமாகவும், சம நீதியுடனும், சம உரிமைகளுடனும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்பது எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புக்கு அமையவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதனை அங்கீகரிக்கும் வகையில்தான் இன்று எமது 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அனைத்து சமய, சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களும், பாதுகாப்புத் தரப்பினர்களும் இங்கே பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.'
'இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்கின்ற ஐக்கியம், சகவாழ்வு, நிரந்தர சமாதானம், அதிகாரப் பரவலாக்கம், நல்லாட்சி நிர்வாகம் போன்றவற்றை அடைவதற்காக நாம் அனைத்து சமய, சமூகங்களினதும், அரசியற்கட்சிகளினதும் தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும், பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தேச்சியாக மேற்கொண்டு வருகின்றோம். இந்த வகையில் வட மகாண சபைக்கான தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்களை நடாத்தி வடக்கு மாகாண முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் மாத்திரம் அவர்களுடன் நாம் கௌரவமான அரசியல் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளோம்.'
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இவ்வாறு நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டு வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கும், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையிலான சமாதானம் நிலவும் ஒரு சகவாழ்வை ஏற்படுத்த நாம் முன்சென்று முயற்சித்து சாதித்துக் காட்டியதைச் சகித்துக் கொள்ள முடியாத சில சக்திகள் எம்மை பயங்கரவாதிகளாகவும், வெளிநாட்டுச் சக்திகளின் அடிவருடிகளாகவும், தேசத் துரோகிகளாகவும் சித்தரித்து வருவதையும் நாம் அறிவோம்.'
'அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட இத்தகைய பிரச்சாரங்களினால் இந்நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும், புலனாய்வுத் துறையினருக்கும் கூட எமது இயக்கத்தின் மீது ஒரு சந்தேகப் பார்வை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் நாம் அவர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடாத்தி எம்மைப்பற்றிய புரிந்துணர்வையும், நல்லபிப்பிராயத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றோம்.'
'அதன் பிரதிபலனாகவே இன்றைய எமது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கிழக்கு மாகாணத்திற்கான இராணுவக் கட்டளைத் தளபதி லால் பெரேரா அவர்களின் சார்பில் களுவாஞ்சிக்குடி பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி ரொபின் அல்விஸ் அவர்கள் இங்கு சமூகமளித்துள்ளார்கள். அவர்களினதும், எமது மக்களான உங்களினதும், பல் சமய, சமூகத் தலைவர்கள் முன்னிலையிலுமாக நாம் இந்த நாட்டை ஒரு போதும் காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்ய மாட்டோம் என்கிற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி அதனையே எமது 66வது தேசிய சுதந்திர தினச் செய்தியாகவும் முழு நாட்டுக்கும் பிரகடனம் செய்கின்றோம்.'
'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பது இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமான ஒரு அரசியல் கட்சியல்ல. அது எல்லா இனங்களையும், மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்குமான சமூக அரசியல் விவகாரங்களைக் கையாளுகின்ற ஒரு பொதுத் தளமாகும். அனைத்து சமயங்களின் உரிமைகளையும், கலாச்சார உரிமைகளையும் இந்நாட்டில் பேணிப் பாதுகாத்து பாரபட்சமற்ற நல்லாட்சி நிர்வாகமொன்றை இந்நாட்டில் கட்டியெழுப்புவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களும் அற்ற சுதந்திர இறைமை கொண்ட நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காகவும் எமது இயக்கம் தொடர்ந்தும் அதன் பணிகளை முன்னெடுக்கும்.' என தெரிவித்தார்
Post a Comment