சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சுவையான ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)
(மருதூர் ப்ரிஆ)
2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அனர்த்தத்தினால் சின்னாபின்னமாகிப் போன சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையானது அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியினால், புதியதோர் இடத்தில் புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி போன்ற ஊர்களைச் சேர்ந்த நோயாளர்களை அரவணைத்து வருகின்ற இவ்வைத்தியசாலையில் அண்மைக்காலமாக பலவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையாக, வித்தியாசமான முறையிலே மேற்படி வைத்தியசாலையிலே கடமையாற்றுகின்ற வைத்தியர்கள், இடைநிலை உத்தியோகத்தர்கள், தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தவர்களுடன் ஒன்றுகூடும் நிகழ்வொன்றை வருடந்தோறும் நடாத்தத் தீர்மானித்து அதன் முதல் நிகழ்வை 01. 02. 2014 சனிக்கிழமை மாலைப்பொழுதிலே, இந்த வைத்தியசாலையின் மண்டபத்திலே மிகவும் கோலாகலமாக அரங்கேற்றினர்.
வைத்தியசாலைகளைப் பொறுத்தமட்டிலே, இவ்வாறான ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்ற போதிலும், அவை குறித்த ஒரு பிரிவினரை மாத்திரம் உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், இவ்வைத்தியசாலையிலே இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வானது அதற்கு மாற்றமாக, அங்கே கடமை புரியும் சகலரையும் உள்ளடக்கி நிகழ்த்தியிருப்பது நமது இலங்கைத் திருநாட்டின் சுகாதாரத்துறையிலே ஒரு சாதனையாகக் கூட இருக்கலாம்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் அவர்களின் தலைமையிலே, இங்கே கடமையாற்றும் சகலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒழுங்குபடுத்தியிருக்க, பெரியவர்கள் முதல் சிறுவர்களும் சந்தோசமாக நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மகிழ்வுற்றனர். விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்களும் தங்களின் நோய்களையும் மறந்தவர்களாக மகிழ்ச்சியாக இருந்ததனைக் காணமுடிந்தது. இவ்வாறானதொரு நிகழ்வை வைத்தியசாலையொன்றில் காணக்கிடைத்தது இதுவே முதலாவது தடவை என்று பல நோயாளர்களும் கூறினர்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வை வருடந்தோறும் நடத்துவதெனவும், எதிர்காலத்திலே இது போன்ற பலவிடயங்களை அறிமுகப்படுத்தவுள்ள அதேவேளை, நோயாளர்களின் நலனே முதன்மையானது எனவும், எதிர்காலத்திட்டங்கள் எல்லாம் 'சினேகபூர்வமான வைத்தியசாலை' ('ப்ரெண்ட்லி ஹொஸ்பிடல்') என்ற கருத்தோட்டத்திலேயே அமையும் எனவும் இந்த நிகழ்வின் போது முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment