இறந்தவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற மோட்டார் சைக்கிளில் அமர வைத்து புதைத்த வாரிசுகள்
மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. சிறு வயது முதல் பைக் பிரியராக இருந்த இவர் காலப்போகில் பைக் வெறியராகவே மாறி விட்டார்.
அதிவேகமாக செல்லும் விலையுயர்ந்த 'ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிளை வாங்கி, அமெரிக்க வீதிகளை கலக்கிவந்த இவர் தனது விசித்திரமான இறுதி ஆசையை குடும்பத்தாரிடம் தெரிவித்தபோது, ‘பெருசு ஏதோ காமெடி பண்ணுது’ என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால், வயது ஏறிக் கொண்டே போனபோது பில் ஸ்டான்ட்லியின் பிடிவாதமும் தீவிரமடைந்துக் கொண்டே போனது. இறுதியாக, தங்களை பாசத்துடன், செல்லமாக வளர்த்த தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதாக மகன்களும், மகளும் உறுதியளித்தனர்.
அதன்படி, தங்களின் தாயாரின் சமாதி அருகே 3 கல்லறைகளுக்கான இடத்தை முன்பதிவு செய்தனர். மகன்கள் இருவரும் இரவு பகலாக சிந்தித்து, அதிக பாரத்தை தாங்கக்கூடிய ஒரு கண்ணாடி பேழையை தந்தையின் இறுதிப் பயணத்துக்காக தயார் செய்தனர்.
தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு அந்தப் பேழையை பெருமையுடன் அறிமுகம் செய்விப்பதிலேயே பில் ஸ்டான்ட்லியின் இறுதிக் காலத்தின் பெரும்பகுதி கழிந்தது. நுரையீரல் புற்று நோயின் பாதிப்புக்கு உள்ளான அவர், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26-ம் தேதி தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார்.
தந்தையின் இறுதி ஆசையை அவர் எண்ணியதை விட மிகச் சிறப்பாக நிறைவேற்ற வாரிசுகள் முடிவு செய்தனர். பிரேதத்தை பதப்படுத்தும் 5 நிபுணர்களை வரவழைத்து, ஏற்கனவே உருவாக்கப்பட்ட கண்ணாடி பேழை முழுவதையும் நறுமண தைலங்களால் நிரப்பினார்கள்.
பில் ஸ்டான்ட்லியின் பிரியத்துக்குரிய 'ஹார்லி டேவிட்சன்' நிறுவனம் 1967-ம் ஆண்டில் தயாரித்த 'எலெக்ட்ரா கிலைட்' மாடல் மோட்டார் சைக்கிளை கண்ணாடி பேழைக்குள் இறக்கி வைத்தனர்.
ரேஸ் வீரர்கள் அணிவதைப் போன்ற ‘லெதர் ஜாக்கெட்’, ‘ஹெல்மெட்’, ‘கூலிங் கிளாஸ்’ சகிதமாக பில் ஸ்டான்ட்லியை அமர்ந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் மீது வைத்து தோல் பட்டைகளால் கட்டினர். அந்த பைக் பிரியரின் இறுதி ஆசையை பூரணமாக நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அப்பகுதியின் முக்கிய சாலைகள் வழியாக அந்த கண்ணாடி பேழையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
நண்பர்களும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவருக்கென முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கல்லறையில் நேற்று புதைத்து தங்களின் பாசமிகு தந்தைக்கு பிரியாவிடை அளித்தனர்.
Post a Comment