பைசல் காசிம் எம்.பி.யின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
(சுலைமான் றாபி)
எமது தாய்நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும், கட்டியெழுப்ப அனைவரும் உறுதி பூண வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இலங்கையின் 66வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்திலிரிந்தும், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கிலிரிந்தும் எழுச்சி பெற்று தற்போது எமது நாடு பொருளாதார ரீதியில் தன்னிறைவு கண்டுகொண்டு வருகின்றது. அந்த வகையில் ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அந்நாட்டில் வாழுகின்ற அனைத்து வித மக்களும் இன, மத, மொழி என்பவற்றைக் கடந்து ஒற்றுமையுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் மாத்திரமே அபிவிருத்தியைக் கண்டு கொள்ளலாம். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் மக்கள் மத்தியில் உண்டாகாமல் போனதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். அதன் பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சியில் பயங்கரவாத சூழ்நிலைகள் அழித்தொழிக்கப்பட்டு ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் ஒன்றாக கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் தற்காலத்தில் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் அரசியல், கல்வி, சமூக கலாச்சாரம், பண்பாடு மற்றும் மத விழுமிய கோட்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்தும் போதே அது உண்மைப்படுத்தப்படுகிறது. மாறாக இந்த விடயங்களில் தலையீடுகள் அதிகரிக்குமாக இருந்தால் சுதந்திரத்தில் காணப்படும் அடிநாத விடயங்கள் புறந்தள்ளப்பட்டு பெற்ற சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் சாதனமாக மாறிவிடும். எனவே இந்த விடயத்தில் எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் தாங்கள் பெற்ற சுதந்திரத்தை தாங்களாகவே முன்வது பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே முழுத்தேசமும் சுதந்திரம் எனும் சுவாசக் காற்றை நிம்மதியாக சுவாசிக்க முடியும்.
எனவே இந்த நாளில் எமது தாய்நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும், கட்டியெழுப்ப உறுதி பூண வேண்டும். அதேபோன்றுதான் இந்த சுதந்திரம் கடின உழைப்பு, தேசப் பற்று, தேச ஒற்றுமை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியினைக் கொண்டுவர வேண்டும் என தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment