Header Ads



மடவளையில் ஜும்ஆ தொழுகைக்கு வந்தவர்களுக்கு பொலிஸாரின் அறிவுரை

கடந்த ஜனவரி மாதத்தை விட பெப்ரவரி மாதத்தில் கட்டுகாஸ்தோட்டை மற்றும் வத்துகாமம் பொலீஸ் பிரிவுகளில் வழிப்பறிக் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்களின் விழிப்பின்றி இதனைக் குறைப் பது சிரமம் என்றும் வத்துகாமம் பொலீஸ் நிலைய பொலீஸ் பரிசோதகர் பிரேமசிரி தெரிவித்தார்.

(28.2.2014) மடவளை ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற ஜூம்மாத் தொழுகையின் பின் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலீஸ் நிலையங்களில் பதிவான முறைப்பாடுகளை பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் திரட்டப்பட்ட சில தகவல்களை பொதுமக்களுக்கு முன் வைப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 4ம் திகதி ஒரு சில குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் வெளிவந்த பின்பும் வெளிவர முன்பும் உள்ள காலங்களை ஒப்பீடும் போது தற்போது வழிப் பறிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்கள் அதிகரிப்பிற்கும் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்ட கைதிகளுக்கு மிடையில் தொடர்புகள் இருக்கலாம் என்ற ஒரு கருதுகோளின் அடிப்படையில் இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பதன் மூலம் அவ்வாறான குற்றச் செயல்களை குறைந்த மட்டத்தில் பேணிக் கொள்ளலாம். அண்மையில் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் ஒரு சில சீ.சீ.டி.வி. கமராக்களில்  பதிவாகியுள்ளன. அதனைப் பார்க்கும் போது இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒரு சிலரும் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதை ஊகிக்க முடியும். அவ்வாறானவர்கள் நன்கு ஆயுதப் பயிற்சியும் உடற்பயிற்சிகளும் பெறறவர்கள். எனவே ஆயுதங்களைக் கையாள்வது தப்பிச் செல்வது போன்ற விடயங்கள் அவர்களுக்கு மிகப் பரிச்சயமாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் இயன்ற வரை சந்தேக மான நடமாட்டங்களை அவதானிக்க வேண்டும். அப்படியானவர்களின் ஆள் அடையாள அட்டை மற்றும் வாகனங்களின் பதிவு இலக்கம போன்ற வற்றை பரிசீலனைக்கு உற்படுத்துவதன் மூலம் ஓரளவிற்கு அதனைக் குறைக்க முடியும். ஏனெனில் பொதுமக்கள் விழிப்பாக உள்ளனர் என்ற ஒரு காரணத்தால் அவர்களது நடவடிக்கைகளை ஒத்திவைக்கலாம். அல்லது இடத்தையும் நேரத்தையும் மாற்றலாம்.
அத்துடன் கடைகளில் கூடுதலான வியாபார நடவடிக்கைகள் நடக்கும் நேரம், வங்கியில் பண வைப்பிலிடப் படும் நேரம் போன்ற வற்றை அவர்கள் பெரும்பாலும் நோட்டமிடுவர். திடீர் என்று வந்து கொள்ளை இடுவதில்லை.
இவ்வாறு நோட்டமிடுவதற்காக அவர்கள் உதவி நிதி சேகரிப்போர் போன்றும் வீடுகளில் பொட்டனி வியாபாரிகளாக அல்லது கூவி விற்கும் வியாபாரிகளாக வந்து போகலாம். புpச்சைக் காராகளாகவும் வரலாம். அப்படியானவர்களை சற்று அவதானிக்க வேண்டும்.

அத்துடன் வீடுகளில் நகைகளை வைத்துள்ளவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். உதாரணமாக எல்லா நகைகளையும் ஒரே இடத்தில வைக்க வேண்டாம். அதேபோல் நிச்சயம் பணம் வைக்கக் கூடிய இடங்கள் அல்லது கட்டாயமாக நகைகள் வைக்கக் கூடிய இடங்களை அவர்கள் இலகுவாக இனம் கண்டு கொள்வதனால், சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்ப அவற்றை இடம் மாற்றி வைத்துக் கொள்ள முடியும். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள சகல கதவுகளையும் மற்றும் பூட்டக் கூடிய பெட்டகங்கள் போன்ற அனைத்தையும் திறப்புப் போட்டு மூடி வைப்பதால் திருடர்களது நேரத்தை தாமதப் படுத்தமுடியும். அதற்கிடையில் ஏதும் மாற்றங்கள் நிகழலாம். இவ்வாறு புத்தி சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதிகமான வழிப் பறிக் கொள்ளைகள் பெண்களின் தங்கச் சங்கிலி பறிப்பதாக உள்ளன. எனவே தேவையற்ற பயணங்களுக்கு நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். சிலவேளை அறிமுக மில்லாதவர்கள் ஏதும் முகவரிகளைக் கேட்பதாக நடிப்பர். ஏதும் கடிதத் துண்டுகளைக் காட்டி உங்கள் கவனத்தை திசை திருப்புவர். அந்நேரம் பார்த்து திட்டமிட்டபடி மற்ற நபர் வந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்ல முடியும்.

இதனை விட இன்னொரு விடயத்தையும் கவணிக்க வேண்டும். தமது பொக்கட் பணத்தைப் பாதுகாப்பதை விட உங்களது ஆள் அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம், பாஸ்போட் போன்ற வற்றை களவு கொடுக்காது பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்படி தவறி விட்டால் உடனடியாக அவ்விடத்தில் உள்ள பொலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விடுங்கள். ஏனெனில் அவ்வாறு திருடப்பட்ட அடையாள அட்டைகளைப் பயன் படுத்தி சிம் கார்ட்களைப் பெற்று அதனை குற்றச் செயல்களுக்குப் பயன் படுத்துவர். அல்லது குற்றம் ஒன்றைச் செய்து விட்டு அவ்விடத்தில் உங்களது ஆள் அடையாள அட்டையை போட்டு விட்டுப் போய் விடுவர். இதனால் பொலீஸாரின் முழுக் கவனமும் வேறுபக்கம் திரும்புவது மட்டுமல்ல முதலாவது கைதாகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.

அண்மையில் மடவளையைச் சேர்ந்த ஒரு நபருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப் பொன்றை மேற்கொள்ளும் படி தகவல் வந்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்தில் இருந்து கதைப்பதாகக் கூறி குறிப்பிட்ட நபருக்கு ஒரு இலட்ச ரூபா அதிஷ்டச் சீட்டு விழுந்துள்ளதாகவும் அதனை 'கிளியரிங்' செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக அவர் வங்கி கணக்கு உற்பட பல விபரங்கள் கேட்கப் பட்டுள்ளது. அப்பாவியான அவர் அவற்றை வழங்கியுள்ளார். பின்னர் பணம் வைப்பிலிடுவதற்கு அரச வரியாக ஒரு தொகைப் பணம் வைப்பில் இடும்படி கூறப்பட்டுள்ளது. எல்லாம் செய்தாகி விட்டது. ஆனால் குறிப்பி;ட நபரின் வங்கி வைப்பில் பணம் இடப்பட வில்லை. பின்னர் அவர் மேற்சொன்ன தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது அது செயல் இழந்துள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது அப்படி ஏதும் தாம் அறிவிக்க வில்லை என்றும் அவை போலியானவை என்பதும் தெரிய வந்துள்ளது.

இப்படிப் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிம்கார்ட் ஏற்கனவே காணமற்போன ஒரு சிம்கார்ட் ஆகும். சம்பந்தப்பட்டவர் பொலீஸில் இது பற்றி முறைப்பாடு செய்யாதிருந்தால் அவரே முதலில் கைதாகுவார். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு என்று கூறினார். எனவே பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றும் கூறிpனார்.

No comments

Powered by Blogger.