சவூதி அரேபியா, இந்தியா இணைந்து நிறுவும் அரிசி விநியோக மையம்
மத்திய கிழக்கு நாடுகளின் நுகர்வோருக்காக இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து அரிசி விநியோக மையத்தை துபையில் நிறுவ உள்ளன.
சவூதி அரேபியாவின் இளவரசர் மிஷால் பின் அப்துல்லா பின் துர்கி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த உலக தனியார் முதலீட்டாளர் வி.ராமன்குமார் ஆகியோர் இந்தியாவின் அரிசி உற்பத்தியாளருடன் இணைந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தின் நுகர்வோர்களுக்காக பிரமாண்ட அரிசிக் கிடங்கு மற்றும் விநியோக மையத்தை துபையில் நிறுவ உள்ளனர்.
2.7 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.167.49 கோடி) முதலீட்டில் அரிசியை சேமிப்பது, மெருகேற்றுவது, சிப்பம் கட்டுவது, 2014ஆம் ஆண்டில் 1 லட்சம் டன் கொள்ளளவு பாசுமதி அரிசி சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்துவது போன்ற வசதிகள் அந்த மையத்தில் அமைக்கப்படவுள்ளன என்று அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து முதலீட்டாளர் ராமன்குமார் கூறுகையில், ""அரபு நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் உணவு பாதுகாப்புக்கான திட்டங்களை அளிப்பதும், அதில் பங்கு பெறுவதும் எங்களின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது, அனைத்து அரபு நாடுகளிலும் உணவுப் பொருள்கள் உள்பட 20 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. 90 சதவீத உணவுப் பொருள்கள் இறக்குமதி மூலமே கிடைக்கின்றன. ஆனால், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களை 3 மாதம் வரை மட்டுமே சேமித்து வைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனினும், வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு முழுமையடைவில்லை'' என்றார்.
Post a Comment