இலங்கைக்கு எதிரான தகவல்கள் வழங்கியவர்களில் முஸ்லிம் காங்கிரசும் உள்ளது - விமல் வீரவன்ச
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தயாரித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள, இலங்கைக்கு எதிரான தகவல்கள் வழங்கியவர்களில் அமைச்சு பதவியின் சிறப்புரிமைகளை அனுபவித்து வரும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
சீதுவ லியனகஹாமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான யோசனை மீதான வாக்கெடுப்பு மார்ச் 28 ஆம் திகதி நடத்தப்படுவதால், அரசாங்கம் மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலை 29 ஆம் திகதி நடத்துவதாக சர்வதேசத்திற்கு துதிப்படும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா வாக்கெடுப்பை காட்டி தேர்தலில் வெல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக இவர்கள் கூறுகின்றன.அவர்கள் கூறுவது பொய்யான கதை. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றது. அப்போது எந்த ஜெனிவா வாக்கெடுப்பு நடந்தது?.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தில் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஜெனிவாவில் வாக்கெடுப்பு நடந்தாலும் நடக்காது போனாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறும் வெற்றியை நிறுத்த எந்த ஜம்பவானும் நாட்டில் இல்லை.
எனினும் இம்முறை ஜெனிவா வாக்கெடுப்பும், மேல், தென் மாகாணங்களின் தேர்தலும் அடுத்தடுத்து வருவதால், தேசத்தின் மன உறுதியையும், நாட்டின் ஐக்கியத்தை எதிரான சக்திகளுக்கு காண்பிக்கும் சிறப்புமிக்க சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.
Post a Comment