குழந்தைகளுடன் செல்லும் போது காருக்குள் சிகரெட் பிடிக்க தடை இங்கிலாந்து அரசு அதிரடி
(TM) இங்கிலாந்தில் காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோர் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் சிகரெட் பிடிக்க நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், முக்கியமான இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சியினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக இளந்தலைமுறையினர் சிகரெட், மதுபானம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம், சிகரெட் உள்ளிட்ட பழக்கங்களை பொது இடத்தில் மேற்கொள்ள கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
இதனையடுத்து முதல்கட்டமாக இங்கிலாந்து அரசு சிகரெட் புகைக்க கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து செல்லும்போது காருக்குள் புகைக்க கூடாது என தடை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் அங்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் இங்கிலாந்து அரசு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், இது தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக உள்ளது என சில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத கார்களில் செல்லும்போது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஒரு சில சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களே இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment