Header Ads



ரஷ்யா ஒலிம்பிக் போட்டியில் பூகம்பம் வருவதற்காக இறைவனை வேண்டும் போராளிகள்..!

ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இந்தப் போட்டிகளைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் செல்வாக்கினை உயர்த்த உதவும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றார். 

எனவே இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வடக்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள இஸ்லாமியப் போராளிக் கழகங்கள் இப்போட்டிகளைத் தீவிரமாக எதிர்த்து வந்த போதிலும் பலத்த பாதுகாப்புடன் அவர் இப்போட்டிகளை நடத்தி வருகின்றார். இவற்றில் சில போட்டிகள் 19ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப்பட்ட சிர்சாசியன் பிரிவினரின் தாயகமாகக் கருதப்பட்ட இடங்களில் நடைபெறுகின்றன.

கடந்த வருடம் இந்தப் போட்டிகளைத் தடை செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்த காகசஸ் எமிரேட் என்ற உள்ளூர் போராளிகள் பிரிவு நேற்று அவர்களின் இணையதளப் பிரிவான இங்குஷெட்டியா ஊடகக் கிளையில் புதிய அழைப்பு ஒன்றை விடுத்திருந்தது. இஸ்லாமையும், முஸ்லிம்களையும் பாதுகாக்க நமது முன்னோர்கள் ரத்தம் சிந்திய இடத்தில் இத்தகைய சாத்தானின் நடனங்களை நாத்திகர்கள் நடத்துகின்றனர். மத நம்பிக்கையற்ற இவர்கள் செய்யும் கொடுமையான செயல்களை குருடர்கள் கூட பார்க்கமுடியும். 

எங்களைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இந்தப் போட்டிகளின்போது சோச்சியில் பூகம்பம் வருவதற்காக இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். இதனால் மத நம்பிக்கை அற்றோர் அனைவரும் நரகத்தின் முன் நிறுத்தப்பட்டு வெள்ளத்தில் அழிந்து போவார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மத நம்பிக்கை அற்றோருக்கான கடைசி பூகம்பத்தை அல்லா சோச்சியில் உண்டாக்கட்டும் என்று காகசஸ் பகுதியில் இஸ்லாமிய அரசை நிறுவப் போரிட்டு வரும் எமிரேட்ஸ் அமைப்பின் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.