Header Ads



இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு இந்திய உதவிகள் சரிவர கிடைப்பதில்லை - இந்திய வெளிவிவகார செயலாளர்

(Tm) இந்திய உதவிகளைப் பெறுவதில் முஸ்லிம்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு நாங்கள் பார்த்துக்கொள்வோம் என இந்திய வெளிவிவகார செயலாளர் திருமதி சுஜாதா சிங், (13-02-2014) இலங்கை ஊடகவியலாளர்களை புதுடில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள உயர்மட்ட ஊடகவியலாளர்கள் 20பேர் அடங்கிய குழு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லியை வந்தடைந்துள்ளது. இன்று மாலை, இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் திருமதி சுஜாதா சிங்குடன் இலங்கை ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர் இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்திய உதவிகள் சரிவர கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் நாங்கள் கூடிய கவனம் செலுத்துவோம். அதேவேளை, மலையக தமிழர்கள், கிழக்கிலங்கை, புத்தளம் பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுக்கு நாங்கள் வீட்டுத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறோம். எனவே, அவர்களை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. 

நீண்ட காலமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய உதவிகளை துரித கதியில் முன்னெடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவை அனைத்துமே காலப்போக்கில் கிரமமாக கிடைக்கும்.

No comments

Powered by Blogger.