Header Ads



தொழிலதிபராக இருந்த நான், பாராளுமன்றத்திற்கு சென்றது சமூகங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே

(சுலைமான் றாபி)

பின் நவீனத்துவ காலத்தில் இளைஞர்களும், கல்வியில் திறமைச்சித்தி பெற்றவர்களும் பெரியோர்களினதும், கல்விமான்களினதும்  அறிவுறைகளை உதாசீனப்படுத்தியதன் விளைவாகவே  தற்காலத்தில் பின் தங்கிய சூழ் நிலைகளில் காணப்படுகின்றார்கள் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். இன்று (02.02.2014) நிந்தவூரில் இயங்கி வரும் IT Campus நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்  வழங்கும்  நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்.. 

அன்று நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் "Graduate Association"  மூலமாக தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினை ஒழுங்கு செய்த போது தொழில் சம்பந்தமாக அறிந்து கொள்ள எவரும் அங்கு சமூகமளிக்கவில்லை. இறுதியில் மேடையினை கெளரவிப்பதற்காக பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களைக்கொண்டு அந்த நிகழ்வினை நடாத்தி முடித்தோம். அன்று இவ்வாறான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகளில் கணிசமானவர்கள் பங்கு பற்றியிருந்தால் இன்றைய காலத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வினை எட்டியிருக்க முடியும். இன்று எமது இளைஞர்கள் செல்லும் வழி ஒரு தவறான வழியாக காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலைகளில் ஒவ்வொரு இளைஞனுக்கும்  புத்தி மதிகள் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அந்த நிலைப்பாட்டிலேயே அரசியல் வாதிகளும், பெற்றோர்களும் காணப்படுகின்றார்கள். எனவே இவைகளை தற்கால இளைஞர்கள் புரிந்து செயற்பட வேண்டும். இந்த நிகழ்வில் இளைஞர்களை  அழைத்தது சான்றிதழ் வழங்குவதற்கு அல்ல! மாறாக இதன் பின்னர் இருக்கின்ற ஒவ்வொரு மணித்தியாலங்களும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை சிந்திக்க வைக்கின்ற நிகழ்வாக அமைந்திருக்கிறது. தற்காலத்தில் எழுபத்தைந்து வீதமான  இளைஞர்கள் ஆங்கிலம் பயின்றவர்கள். ஆனால் அவர்களால் ஆங்கிலம் பேச முடியாது!! இந்த நிலைமைதான் தற்கால வேலை வாய்ப்பிற்கு கேள்விக் குறியாய் காணப்படுகின்றது. 

மேலும் தான் தொழிலதிபராக இருந்து பாராளுமன்றத்திற்கு சென்றது சமூகங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே. இதனால் சமூகங்களின் மீது அக்கறை செலுத்தி அதன் பொறுப்புக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் எமக்குண்டு. அண்மையில் பாராளுமன்றத்தில் உயர் கல்வி சம்பந்தமாக இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் முகாமைத்துவம் சம்பந்தமாக அதிகம் பேசப்பட்டது. இதன் பாதீட்டு வடிவமாக அதிகமான மாணவர்கள் முகாமைத்துவத்தினை தெரிவு செய்து பல்கலைக் கழகம் சென்று இறுதியில் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இனிவரும் காலங்களில் இந்த முகாமைத்து துறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நாட்டில் சனத்தொகை அதிகரித்துச்செல்லும் போது கல்வி கற்கின்ற செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டுசெல்கின்றன. தற்காலத்தில் தங்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிலேயே அதிகமான பெற்றோர்கள் காணப்படுகின்றார்கள். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் புலமைப் பரிசில் காலத்தில் கல்வி பயிலும் போது அவர்களால் எடுக்கும் கரிசனையை விட  அவர்கள் (O/L) அல்லது (A/L) பரீட்சை எடுக்கும் காலங்களில் எடுக்கும் கரிசனை  குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலை முற்றாக மாற வேண்டும். இதனால் தான் தற்கால  மாணவர்களின் கல்வி வீதம் குறைந்த நிலைகளில் காணப்படுகிறது. 

எனவே, தற்கால சூழ்நிலைகளில் இளைஞர்கள் தங்களுக்குண்டான எந்தந்த துறைகளில் பிரகாசிக்கின்றார்களோ அந்தந்தத் துறைகளிலே அவர்களை அவர்கள் வளப்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே இவ்வாறான நிலைப்பாட்டின்  மூலம் இளைஞர்கள் சிறந்த தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே NVQ சான்றிதழுக்கு  ஈடான பயிற்ச்சி நெறிகளை தொழில் பயிற்சி அதிகார சபையும், தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையும் (NAITA), தொழில் நுட்பக் கல்லூரிகளும் அறிமுகம் செய்துள்ளன. மேலும் பெண்கள் இன்று பல்கலைக் கழகமாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும் முன்னிலையில் காணப்படுகின்றனர். ஆனால் ஒப்பீட்டு ரீதியில் ஆண்களின் நிலைகள் இதனை விட குறைவாகவே காணப் படுகின்றது. எனவே இந்த நிலை மாறி இருதரப்பும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

No comments

Powered by Blogger.