மோடியின் 'நமோ' டீ க்கு பதிலாக, ராகுல் காந்தியின் 'ராகா' பால்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் டீ பிரசாரத்திற்கு போட்டியாக, ராகுலின் பெயரின் முன் எழுத்துக்களைக் கொண்டு ராகா பால் வினியோகத்தை உ.பி., காங்கிரசார் துவக்கியுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவக்க காலத்தில் டீ கடை வைத்திருந்ததால், டீக்கடைக்காரர்கள் எல்லாம் பிரதமர் ஆகலாமா என கேள்வி எழுப்பி காங்கிரசார் பிரசாரம் செய்தனர். இதையடுத்து, டீ அருந்திக்கொண்டே விவாதிக்கலாம் என்ற பெயரில், நாடு முழுவதும் ஆயிரம் டீ கடைக்காரர்களுடன் விவாத நிகழ்ச்சியை நடத்தி நரேந்திர மோடி அதிரடி காட்டினார். இந்நிலையில், தற்போது நரேந்திர மோடியின் டீ பிரசாரத்திற்கு பதிலடியாக, "ரா கா" (ராகுலின் ஆங்கில பெயரின் முதல் எழுத்துக்கள்) என்ற பெயரில் பால் வினியோகத்தை உ.பி., காங்கிரசார் துவக்கியுள்ளனர். உ.பி.,யின் கிழக்கு பகுதியில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்கர் என்ற இடத்தில் இந்த பால் பிரசாரம் துவங்கியுள்ளது. இந்த பகுதியில் தான் நரேந்திர மோடி சமீபத்தில் மிகப்பெரிய பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரா கா" பால் வினியோகம் குறித்து கோரக்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சையது ஜமால் கூறுகையில், நரேந்திர மோடியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க தாங்கள் தயாராகி விட்டதாகவும், அதன் முதல்கட்டமாக தற்போது ரா கா பால் வினியோகத்தை துவக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நரேந்திர மோடியின் நமோ டீ உடல்நலத்திற்கு கேடானது என்றும், ஆனால் "ரா கா" பால் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறிய அவர், தற்போது கோல்கர் பகுதியில் துவக்கப்பட்டுள்ள இந்த பிரசாரம், பின்னர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் துவக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment